14வது ஆசிய கோப்பையின் கடைசி சூப்பர் 4 சுற்று நேற்று நடந்தது. இதில், இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இறுதியில் பாகிஸ்தானை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் பங்களாதேஷ் அணி நுழைந்தது.
அபுதாபியில் உள்ள ஷேக் சையது ஸ்டேடியத்தில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 48.5 ஓவர் முடிவில், பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால், அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 239 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பேட்டிங்கை தேர்வு செய்த பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை தராமல், சொர்ப்ப ரன்களுக்கு அவுட்டாகினர். துவக்க ஆட்டக்காரர் லித்தன் தாஸ் 6 ரன்கள், செளமியா சர்க்கார் டக் அவுட், மாமினுல் ஹாக் 5 ரன்கள் என அவுட்டாகியதால், பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
பின்னர் 4வது மற்றும் 5வது வரிசையில் களமிறங்கிய முஷ்பிகுர் ரஹீம் மற்றும் முகமது மிதுன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 116 பந்துகளில் 9 பவுண்டரிகள் விளாசிய முஷ்பிகுர் ரஹீம், 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷயித் அஃப்ரிடி பந்து வீச்சில், சர்ப்ராஸ் கானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால், ஒரு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். முகமது மிதுன் 60 ரன்களுக்கு அவுட்டாக அடுத்து வந்த வீரர்கள் பெரிய ஸ்கோரை எடுக்க தவறியதால், பங்களாதேஷ் அணி 239 ரன்களை மட்டுமே எடுத்தது.
240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் வரை போராடியும் 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணியில் இமாம் உல்-அக் மட்டுமே சிறப்பாக விளையாடி, 83 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ரன்களை குவிக்க தவறியதால், 9 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 34 ரன்கள் வித்தியாசத்தில், இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்த வெற்றியின் மூலம் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், இந்திய அணியை எதிர்கொள்கிறது பங்களாதேஷ் அணி. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான், நாளை போட்டியில் ஆடுவார்கள் என்பதால், இந்தியா ஆசிய கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதேபோல், இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததால், இந்தியாவை பழிதீர்க்க பங்களாதேஷ் அணியும் வியூகம் வகுத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.