மேற்கிந்திய அணி ஒயிட்வாஷ்: டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!

india won test series against windies

by Mari S, Oct 15, 2018, 06:44 AM IST

மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இந்திய அணி.

ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட்டியில் மேற்கிந்திய அணி முதல் இன்னிங்சில் 311 ரன்களும், இந்தியா 367 ரன்களும் சேர்த்தது.

56 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய அணி, உமேஷ் யாதவ் (4), ஜடேஜா (3) ஆகியோரின் அபார பந்து வீச்சால் 127 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியாவை விட 71 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதனால் 72 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை சேஸ் செய்ய இந்தியாவின் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக முதல் இன்னிங்சில் ஏமாற்றம் அடைந்த லோகேஷ் ராகுல் பொறுப்புடன் விளையாடினார். இருவரும் ஆட்டமிழக்காமல் இலக்கை எட்ட உதவிகரமாக இருந்தனர்.

17-வது ஓவரின் முதல் பந்தை பிரித்வி ஷா பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 75 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா தலா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த அபார வெற்றியின் மூலம் 2-0 என மேற்கிந்திய அணியை வீழ்த்தி இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

உமேஷ் யாதவ் சாதனை:

இந்திய மண்ணில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்திய 3-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை உமேஷ் யாதவ் பெற்றுள்ளார். இதற்கு முன் கபில்தேவ் (1980 மற்றும் 1983) இரண்டு முறையும், ஜவகல் ஸ்ரீநாத் (1999) ஒரு முறையும் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளனர். தற்போது உமேஷ் யாதவ் அந்த பட்டியலில் இடம்பெற்று புதிய சாதனையை படைத்துள்ளார்.

You'r reading மேற்கிந்திய அணி ஒயிட்வாஷ்: டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை