சின்னபசங்கடா! மேற்கிந்திய அணியை கதறவிட்ட கேப்டன்கள்!

india won odi against windies

by Mari S, Oct 22, 2018, 08:27 AM IST

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த மேற்கிந்திய அணி முதல் ஒரு நாள் போட்டியிலும் பரிதாபமாக தோல்வி அடைந்தது.

இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா இருவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், சதமடித்து மேற்கிந்திய அணியின் வெற்றிக் கனவை தவிடு பொடியாக்கினர்.


இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. 

இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி, கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அற்புதமாக விளையாடிய ஹெட்டிமர், 76 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். 



இதைத்தொடர்ந்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ஷிக்கர் தவான் 4 ரன்களிலேயே அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதன்பின் ஜோடி சேர்ந்த ரோஹித்-கோலி ஜோடி சரவெடி ஆட்டத்தை ஆட இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.

இருவரும் சதம் அடித்து, மேற்கிந்திய அணியின் வெற்றிக் கனவை பொய்யாக்கி, முதல் ஒரு நாள் போட்டியிலும் வெற்றியை ஈட்டினர்.

ஒரே மேட்சில் 2 சச்சின் சாதனைகள் முறியடிப்பு:

குறைந்த போட்டிகளில் 60 சதத்தை விளாசி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கேப்டன் விராத் கோலி முறியடித்தார். நேற்றைய ஆட்டத்தில் 107 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 21 பவுண்டரிகள் என ரன் மழை பொழிந்த விராத் கோலி 140 ரன்களை குவித்த நிலையில் பிஷு வீசிய பந்தை மிஸ் செய்து, கீப்பர் ஷாய் ஹோப்பின் ஸ்டம்பிங்கில் அவுட் ஆனார்.

மற்றொரு முனையில், கோலிக்கு இணையாக அதிரடி காட்டி வந்த ரோகித் சர்மா, 6வது முறையாக 150 ரன்களை கடந்து சச்சின் மற்றும் டேவிட் வார்னர் 5 முறை 150 ரன்களை கடந்த சாதனையை முறியடித்து உலகளவில் முதலிடம் பிடித்தார்.

இந்த டபுள் டமாக்கா டன்களால் இந்திய அணி 42.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து 326 ரன்கள் எடுத்து வெற்றியை ருசித்தது.

கேப்டன் கோலி மற்றும் அவுட் ஆகாமல் 150 ரன்கள் விளாசிய துணை கேப்டன் ரோகித் சர்மாவின் வெறித்தனமான ஆட்டத்தை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

அடுத்த ஆட்டத்திலாவது மேற்கிந்திய அணி மீளும் முயற்சியை மேற்கொள்ளுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

 

You'r reading சின்னபசங்கடா! மேற்கிந்திய அணியை கதறவிட்ட கேப்டன்கள்! Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை