நடைபெறவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் விபரம் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி பெயர் இடம் பெறவில்லை. விக்கெட் கீப்பிங்கில் அசத்தும் டோனி தற்போது ரன் குவிப்பில் முன்பு மாதிரி பிரகாசிக்க முடியவில்லை. இதனால் அவரை அணியிலிருந்து கழற்றி விட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
டோனிக்கு பதிலாக 21 வயது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 37 வயதான டோனியின் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகிறார்கள். 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்று தந்து வரலாற்றை படைத்த டோனி இதுவரை 93 இருவது ஓவர் ஆட்டங்களில் விளையாடி 2 அரைசதம் உள்பட 1,487 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங்கில் 54 கேட்ச், 33 ஸ்டம்பிங் செய்திருக்கிறார்.
சச்சின் தெண்டுல்கருக்கு இந்த மாதிரி நெருக்கடி ஏற்பட்டபோது ஒரு நாள் போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொண்டு, சில காலம் டெஸ்டில் மட்டும் நீடித்தார். அவரது பாணியில் டோனி, 20 ஓவர் போட்டியை மறந்துவிட்டு, ஒரு நாள் போட்டியில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. டோனி ஏற்கனவே 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் '20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவரது 20 ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று சொல்ல முடியாது. 2-வது விக்கெட் கீப்பர் இடத்திற்கு சில வீரர்களை பழக்கப்படுத்த விரும்புகிறோம்’ என்றார்.
தேர்வு குழுவினரும், அணி நிர்வாகமும் சரியாக ஆலோசித்து முடிவு எடுத்து இருக்கிறார்கள். அணியின் தேர்வு குழு கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரும் பங்கேற்றனர். அதனால் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் தேர்வு குழுவினர் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை.