பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவின் 37 எம்பிக்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தம்பிதுரை வழியிலேயே அவர்களும் பேச உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணிதான் அமையும் சூழல் உள்ளது. இதற்கு லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரைதான் கடும் எதிர்ப்பை முதலில் பதிவு செய்தார்.
தற்போது அதிமுகவின் 37 எம்.பிக்களும் இதே குரலை எதிரொலிக்க தொடங்கி உள்ளனர். இந்தக் கோபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் அதிமுக எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் பேசும்போது, தொகுதி மக்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்ய முடியாமல் போனதற்கு பா.ஜ.க அரசுதான் காரணம். அவர்கள், தொகுதிகளுக்கான நிதியை முறையாகத் தரவில்லை.
மாற்றாந்தாய் மனப்பான்மையுடம் மோடியும் மத்திய அமைச்சர்களும் நடந்து கொள்கின்றனர். சுமூகமான உறவில்லாதபோது அவர்களுடன் எப்படி கூட்டணி வைத்துக் கொள்ள முடியும்?
தம்பிதுரைக்கு தொகுதி வேலைகள் எப்படி நடக்கவில்லையோ, அதேபோல்தான் எங்களுக்கும் இந்த அரசில் எந்த வேலையும் நடக்கவில்லை. பா.ஜ.கவுடன் ஜோடி சேர்ந்து நின்றால், மக்கள் கோபம் நம்மீது திரும்பும்.
மோடியைத் தவிர்த்துவிட்டு தேர்தலை சந்தித்தால், மக்கள் கோபத்தில் இருந்து தப்பிவிடலாம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அப்போதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ப முடிவெடுப்போம். குறிப்பாக, தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலினுக்கு எதிர் இடத்தில் நாம் இருப்போம்' எனக் கூறியுள்ளனர்.
- அருள் திலீபன்