மத்திய, மாநில அரசுகளை அகற்றினால்தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும்: ஸ்டாலின்

Advertisement

மத்திய, மாநில அரசுகளை அகற்றினால்தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாவின் 50-வது ஆண்டு நினைவுநாள் பேரணிக்கு கட்சியினருக்கு அழைப்பு விடுத்து ஸ்டாலின் எழுதியுள்ள மடல்:

தமிழினம் கண்ட தனிப்பெருந்தலைவர், தாய் நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய தகைமையாளர், இனம் - மொழி காக்கும் அறப்போரில் இணையிலா வெற்றி பெற்ற இன்ப சூரியன், காஞ்சித் தலைவன், தென்னாட்டுக் காந்தி, இந்நாட்டு இங்கர்சால் எனப் புகழும் பெருமைகளும் பல கொண்ட அறிஞர்க்கெல்லாம் அறிஞர், பேரறிஞர் அண்ணா இந்த மண்ணைவிட்டு மறைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.


திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் - அரசியல் இயக்கத்தை உருவாக்கி, அகில இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தையும் எதிர்கொண்டு, தன் உழைப்பாலும், உயர்வான ஆளுமையாலும், கரைகண்ட கல்வித்திறனாலும், தம்பிமார்களின் தளரா ஊக்கத்தாலும் பதினெட்டே ஆண்டுகளில் மக்களின் பேராதரவுடன், ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானவர் நம் பேரறிஞர் அண்ணா. ஒன்றே முக்கால் ஆண்டுக் காலம்தான் அவர் ஆட்சி செலுத்தினார்.

அதற்குள் இயற்கை அண்ணனின் உயிரை அவசரமாகப் பறித்துக் கொண்டோடிவிட்டது. ஒட்டுமொத்த தமிழகமும் தன் தவப்புதல்வனை இழந்த வேதனையில் கண்ணீர் வடிக்க, உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இலட்சக்கணக்கானோர் திரண்ட இறுதி ஊர்வலத்தின் மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்று வங்கக் கடலோரம் மீளாத்துயில் கொண்டிருக்கும் பேரறிஞரை நாம் இழந்து அரை நூற்றாண்டு கடந்து விட்டது.


கவியினில் பொருளெனக் கரும்பினில் சுவையெனக்
கதிரினில் ஒளியெனக் காவினில் மலரென
நிலவினில் குளிரென நிலமிசை வளமென
குலவிடும் அருவி குழறிடும் மொழியென
உலவிடும் காற்றில் ஏறிடும் இசையென
அலையெழுங் கடலில் ஆடிடும் நுரையென
கலைமணங் கமழும் கவிஞர்
தலைமகன் அண்ணா திருப்புகழ் பாடிட
நிலமகள் வடிக்கும் கண்ணீர் அந்தோ!
வெள்ளம்! வெள்ளம்! மாபெரும் வெள்ளம்!

- என அண்ணாவின் அழியாப் புகழுக்கு இரங்கல் இலக்கியம் படைத்தார் கருணாநிதி.

மனிதரென்பார் மாணிக்கமென்பார்
மாநிலத்து அமைச்சரென்பார்
அன்னையென்பார் அருள்மொழிக்காவல் என்பார்
அரசியல்வாதி என்பார் - அத்தனையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர்
நெஞ்சத்து அன்பாலே அண்ணா என்ற ஒரு சொல்லால்
அழைக்கட்டும் என்றே –அவர் அன்னை பெயரும் தந்தார்.

அந்த ஆருயிர் அண்ணா உருவாக்கிய கட்சியை – ஆட்சியை -இலட்சியங்களை இந்த அரை நூற்றாண்டு காலமும் தன் நெஞ்சிலும் தோளிலும் சுமந்து நெருப்பாறுகளை நீந்திக் கடந்தவர் கருணாநிதி. பேரறிஞர் அண்ணாவின் பாசமிகு தம்பியாக இயக்கம் வளர்த்து, கோடிக்கணக்கான உடன்பிறப்புகளைப் பெற்ற நம் தலைவர் 95 வயது வரையிலும் தமிழ்ச் சமுதாயத்திற்காக சந்தனம் போல தன்னைத் தேய்த்துக் கொண்டவர். ஓய்வறியா அந்தச் சூரியன் கடந்த ஆகஸ்ட் 7ந் தேதி வானத்திலிருந்து மறைந்துவிட்டது;

மறைந்த பின்னரும் வாழும்போதைப்போலவே நமது மனங்களில் நிறைந்துவிட்டது.

பேரறிஞர் அண்ணா மறைந்தபோது, கருணாநிதி படைத்த இரங்கல் இலக்கியத்தின் இறுதியில்

நீ இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா
நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா

-என எப்போதும் போல் சொன்ன சொல் தவறாமல் தன் அண்ணனிடம் இரவலாக வாங்கிய இதயத்தைப் பத்திரமாக ஒப்படைத்த அன்புத் தம்பியாக அவர் அருகிலேயே துயில் கொள்கிறார் கருணாநிதி.. இரு பெரும் தலைவர்கள் இன்று நம்மிடையே இல்லை; ஆனால், இல்லை என்ற எண்ணம் நெஞ்சில் இல்லை.

ஏனெனில், உள்ளம் எல்லாம் அவர்களே நிறைந்திருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அறிஞர் அண்ணாவின் இதயத்தை கருணாநிதி இரவலாகக் கேட்டதுபோல, கருணாநிதியின் சக்தியில் பாதியைத் தரும்படி அவர் இருக்கும்போதே நான் கோரிக்கை வைத்தேன். கருணாநிதியின் அன்பு வாழ்த்துகளோடும் அனுமதியோடும் அந்த சக்தியைப் பெற்றிருக்கிறேன்.

உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்துள்ள அந்த சக்தி, இந்தப் பேரியக்கத்தை இருபெரும் தலைவர்களின் இலட்சிய நோக்கத்துடன் வழிநடத்திடும் ஆற்றலாக அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், “I am from the Dravidian Stock” என முழங்கி, திராவிட இனத்தின் பெருமையையும் தமிழ் மொழிக்கான உரிமையையும் பண்டித நேரு வியக்கும் வண்ணம் எடுத்துரைத்தவர் பேரறிஞர் அண்ணா.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றி, இந்திய ஒன்றியம் திரும்பிப் பார்க்கும்படி செய்தவர் கருணாநிதி. அந்த இருபெரும் தலைவர்களின் இணையிலாப் பணி இன்றைய நிலையில் அதிகளவில் தேவைப்படுகிறது.

மாநில உரிமைகளைப் பறித்திடும் மனிதாபிமானமற்ற ஒரு கொடுங்கோல் ஆட்சி மத்தியிலே நடைபெற்று வருகிறது. அதனை எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத எடுபிடிகளாக, கொத்தடிமைகளாக மாநிலத்தை ஆள்பவர்கள் மண்டியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

கொடுங்கோண்மை ஒழியவும், கொத்தடிமைத்தனம் அழியவும், அதற்குரிய வலிமை கொண்ட இயக்கம், பேரறிஞர் அண்ணா உருவாக்கிய - கருணாநிதி தொடர்ந்து வழிநடத்திய திராவிட முன்னேற்றக் கழகம்.

நாம் எதிர்கொள்ள வேண்டிய அறப்போர்க் களங்கள் ஏராளமாக இருக்கின்றன. சமூக நீதியை குழி தோண்டிப் புதைக்கும் 10% பொருளாதார இடஒதுக்கீடு, தமிழ் உள்ளிட்ட மொழிகளை அழிக்க இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு, அனிதா-பிரதிபா ஆகியோரின் உயிரைப் பறித்து மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்த நீட் தேர்வு, வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக் கோரிய காவிரி டெல்டாவை ஹைட்ரோகார்பன் மண்டலமாக்கி விவசாயிகளின் வாழ்வுரிமை பறிப்பு, ஜி.எஸ்.டி. வரி மூலம் வணிகர்களின் வயிற்றில் அடிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக நள்ளிரவில் நடுத்தெருவில் நிறுத்தியது என மத்தியில் ஆளுகின்ற மோடி தலைமையிலான பாசிச பா.ஜ.க. அரசின் கொடுங்கோண்மைக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.

அந்தக் கொடுங்கோல் அரசுக்கு கொத்தடிமையாகி குனிந்து தரையைக்கவ்விச் சேவகம் செய்யும் எடப்பாடி பழனிசாமி அரசு, தன் எஜமானார் காலால் இடும் கட்டளைகளைத் தலையில் தாங்கி செயல்படுத்துகிறது. தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலன் புறக்கணிப்பு, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அடிப்படை ஜனநாயகத்திற்கு குழிபறிப்பு, தலைநகரம் தொடங்கி குக்கிராமம் வரை கலெக்ஷன் – கரப்ஷன் - கமிஷன் எனக் கொள்ளையோ கொள்ளை, ஊழலோ ஊழல், லஞ்சமோ லஞ்சம், ஜெயலலிதா வாழ்ந்த கொடாநாட்டில் மர்மக் கொலைகள் என அத்தனை விதமான கிரிமினல் குற்றங்களையும் அனுதினமும் செய்து வருகிறது மைனாரிட்டி எடப்பாடி பழனிசாமி அரசு. இரண்டு ஆட்சிகளையும் அகற்றினால்தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும். உதயசூரியனால்தான் விடியல் வெளிச்சம் கிடைக்கும்.

கருணாநிதியின் உடன்பிறப்புகளான நீங்கள் ஒவ்வொருவரும், பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு இந்த மூன்றையும் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதி நமக்கு வகுத்தளித்த ஐம்பெரும் முழக்கங்களான


அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!
மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி!

இந்த ஐந்தையும் உள்ளத்தில் ஏந்தி உரக்க ஒலித்து, அதனை நிறைவேற்ற உற்சாகத்துடன் செயலாற்றுவோம்.

வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தலைவர்கள் இருவரும் நமக்கு கலங்கரை விளக்குகளாக வழிகாட்டுகிறார்கள். அவர்களின் அடியொற்றி நடந்திடவும் அடுத்த கட்டப் பயணத்தைத் தொடர்ந்திடவும் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரோட்டில் நடந்த நாட்டில் புதிய முழக்கங்களை முன்வைத்தேன்.

கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம்!
தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம்!
அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்!
மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்!
வளமான தமிழகத்தை வளர்த்து எடுப்போம்!

-பேரறிஞர் அண்ணாவும் கருணாநிதியும் வகுத்து தந்த இலட்சியங்களுடன் இந்த 5 முழக்கங்களையும் நெஞ்சில் நிறுத்தி, நெடும் பயணத்தைத் தொடர்ந்திடுவோம்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 3 ஆம் நாள் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு அமைதிப் பேரணியாகச் சென்று மலரஞ்சலி செலுத்துவதைப் பெருங்கடமையாகக் கடைப்பிடித்தவர் கருணாநிதி. அவர் வகுத்துத் தந்த வழியில், பேரறிஞர் அண்ணாவின் 50ஆம் ஆண்டு நினைவு நாளில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து அண்ணா நினைவிடம் வரையிலான அமைதிப் பேரணியில் அலை அலையாகப் பங்கேற்போம். கடற்கரையில் துயில்கின்ற இருபெரும் தலைவர்களையும் இதயத்தில் ஏந்தி, அவர்கள் காட்டிய வழியில் நெடும்பயணத்தை அயராது தொடர்வோம்! இலட்சியப் பாதையில் எப்போதும் வெற்றியை ஈட்டுவோம்!

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>