திமுக கூட்டணியில் பாமக இடம்பெறாததால், மிகுந்த பதற்றத்தில் இருக்கிறாராம் துரைமுருகன். 'என் மகன் கதிர் ஆனந்தை வேலூரில் நிறுத்தி ஜெயித்துவிடலாம் எனக் கணக்கு போட்டேன். அவனோட வெற்றிக்கு ராமதாஸ் குறுக்கே நிற்பார். இதனால் நமக்குத் தோல்விதான் வந்து சேரும்' எனப் பேசியிருக்கிறார்.
அவரது கருத்துக்குப் பதில் அளித்த திமுக தலைமை, பாமக கூட்டணியில் இல்லாததால் வருத்தப்பட வேண்டாம். இரண்டரை லட்சம் வாக்குகளுக்கு மேல் உங்கள் மகன் கதிர் ஆனந்தை வெற்றி பெற வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு.
பாமகவால் நமக்கு எந்த நட்டமும் இல்லை. கருத்துக்கணிப்புகள் எல்லாம் நமக்குச் சாதகமாக உள்ளது.
அதிமுக- பாமக கூட்டணியால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை.
எடப்பாடியை 'எடுபிடி' என்றெல்லாம் விமர்சித்துவிட்டு, அவர்களோடு ராமதாஸ் சேருவதால் மக்கள் நம்ப மாட்டார்கள். தொண்டர்கள் மத்தியில், ஏதோ ஒரு காரணத்துக்காக ராமதாஸ் அந்தப் பக்கம் போய்விட்டார் என்ற கருத்து உள்ளது.
வன்னிய மக்களும் ராமதாஸ் தடம் மாறிவிட்டதாகத்தான் நினைக்கிறார்கள். தருமபுரியில் முல்லைவேந்தனுக்கு சீட் கொடுக்கலாம் என இருக்கிறேன். மற்ற தொகுதிகளில் வன்னிய வேட்பாளர்களை அதிகரிக்கும் முடிவை எடுத்திருக்கிறேன்.
ஜெயலலிதா இருக்கும்போது வெற்றி பெற்ற தொகுதிகளில்கூட அந்தக் கூட்டணி தோற்று ஓடும். எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா அல்ல. அவர்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை' என ஆறுதல்படுத்தியிருக்கிறார்.
- அருள் திலீபன்