திருவண்ணாமலையில் தனியார் காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மகாசக்தி நகர் பகுதியில், அருணை காப்பகம் என்ற பெயரில் தனியார் நிறுவனத்தின் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகம் முறையாக அனுமதி பெறாமல் இயங்கி வருகிறது என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் சென்றுள்ளது. புகார் கடிதம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேற்று காப்பகத்துக்கு சென்று அதிரடி சோதனைகளை மேற்கொண்டார். அப்போது காப்பகத்தில் உள்ள குழந்தைகளிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். அப்போது 15 குழந்தைகள் காப்பக மேலாளர் வினோத்குமார் மீது கண்ணீர் மல்க பரபரப்பான குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். அதில், ``இரவு நேரங்களில் காப்பக கம்ப்யூட்டரில் ஆபாச படங்களை போட்டு பார்க்க சொல்கிறார். பாலியல் ரீதியாக எங்களை தொந்தரவு செய்கிறார்கள். அதை எதிர்த்தால் காப்பகத்தை விட்டு வெளியேற்றிவிடுவேன் என மிரட்டுகிறார். சாப்பாடு கொடுக்கமாட்டேன் என மிரட்டுகிறார்" என சிறுமிகள் கண்ணீர் மல்க கூறினர்.
சிறுமிகளின் குற்றச்சாட்டை அடுத்து வினோத்குமார் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். உடனடியாக காப்பக குழந்தைகள் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். போலீசார் வினோத் குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதி இல்லாமல் காப்பகம் நடத்தியன் நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் திருவண்ணாமலையில் அனுமதி இல்லாமல் செயல்படும் காப்பகங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.