மோடியை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டாலும் நிஜத்தில் பாஜக புள்ளிகளோடு தொடர்பில் இருக்கிறாராம் தினகரன். அதிமுகவோடு இணைய வேண்டும் என்ற சசிகலா மற்றும் கட்சி நிர்வாகிகளின் கருத்தை அவரும் ஏற்றுக் கொண்டுவிட்டார்.
அமமுக என்ற அமைப்பை வைத்துக் கொண்டு தேர்தலை தனியாக எதிர்கொண்டால், திமுக, காங்கிரஸ் அலையில் காணாமல் போய்விடுவோம் என்ற அச்சமும் அவருக்குள் இருக்கிறது. கட்சியில் இருந்து சிலரை நீக்கினால் இணைவோம் என்ற நிபந்தனையை அவர் தொடக்கம் முதலே முன்வைத்து வருகிறார்.
இதுதொடர்பாக பாஜக புள்ளிகளிடமும் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
பாஜகவோடு தினகரன் நெருங்கி வருவதற்கு உதாரணமாக, கடந்த 4-ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கு, ஒத்திவைக்கப்பட்டது.
தினகரனின் வேண்டுகோள் காரணமாகவே இது சாத்தியமானது. மத்திய அரசு நினைத்திருந்தால், ஃபெரா வழக்கு உள்பட சில வழக்குகளில் தினகரனை மீண்டும் உள்ளே வைத்திருக்க முடியும்.
அப்படிச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம், திமுக, காங்கிரஸ் அணிக்குள் தினகரன் போய்விடக் கூடாது என்பதால்தானாம். மோடி தலையிட்டால் அதிமுகவில் இணைப்பு நடக்கும் சாத்தியம் உண்டு என்பதால், டெல்லி வாலாக்களிடம் நெருக்கத்தைக் காட்டி வருகிறார் என்கின்றனர் மன்னார்குடி குடும்ப கோஷ்டிகள்.