சென்னை: தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் சனிக்கிழமை அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களது போக்குவரத்து தேவைக்காக பேருந்தையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ள காரணத்தால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சரியான முன்னறிவிப்பு இல்லாமல் இரவோடு இரவாக 3600 கோடி ரூபாய் அளவிற்குப் பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்கள் விரோத அரசாகத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிவருவதாகக்கூறி இந்தக் கட்டண உயர்வை அறிவித்துள்ள தமிழக அரசு, போக்குவரத்துத்துறை நஷ்டமில்லாமல் நடத்த உரிய நிர்வாக மேம்பாடுகளை மேற்கொள்ளாமல் கட்டணத்தை உயர்த்தி நஷ்ட சுமையை பொதுமக்கள் மீது சுமத்தி உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.
மழை பெய்தால் மழைநீர் கொட்டும் பேருந்துகளும், எலிகளும், கரப்பான் பூச்சிகளும் பயணிகளுடன் சேர்ந்து பயணிக்கு பேருந்துகளும், ஓட்டையும், உடைசலும் எனச் சரியான பராமரிப்பற்ற, தரமற்ற பேருந்துகளும், இயக்கும் தமிழக அரசு கட்டண உயர்வை அறிவித்திருப்பது என்பது மக்கள் மீதான தனது அக்கறையற்ற போக்கையே காட்டுகிறது.
தமிழக அரசின் இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 27.1.2018 சனிக்கிழமை அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் பெருமளவில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இப்போராட்டம் வெற்றிபெற முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.