சிறைத் தண்டனை பெற்றதால் தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்ட ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பேருந்து மீது கல்வீசிய சம்பவத்தில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். எம்எல்ஏ பதவியும் உடனடியாக பறி போனாலும் தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலர் வெளியிடாமல் இருந்தார்.
தேர்தல் ஆணையமும் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானால் மட்டுமே இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அறிவித்திருந்தது.
இதற்கிடையே தண்டனையை ரத்து செய்யக் கோரி பாலகிருஷ்ணா ரெட்டி மேல் முறையீடு செய்ததை உச்ச நீதிமன்றம் ஏற்க முடியாது என்று நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் இன்று அறிவிப்பு செய்துள்ளார்.ஓசூர் தொகுதியையும் சேர்த்து தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ளன. மக்களவைத் தேர்தலுடன் இந்த 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.