தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.
லோக்சபா தேர்தலுக்காக திமுக, அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணிகள் உருவாகியுள்ளன. தினகரனின் அமமுக பக்கம் எந்த கட்சியும் செல்லவில்லை.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக கூடுதல் இடங்களை கேட்டு வருகிறது. இந்நிலையில் தினகரனின் அமமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி சேர தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் முயற்சித்து வருகிறார்.
இது தொடர்பாக விஜயகாந்தை நேற்று திருநாவுக்கரசர் சந்தித்து பேசியிருந்தார். இதனிடையே இன்று நடிகர் ரஜினிகாந்தும் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்த ரஜினிகாந்த், திடீரென விஜயகாந்தை சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், சிங்கப்பூரில் இருந்து சிகிச்சைக்கு முடித்து விட்டு வந்த போது முதல் ஆளாக என்னை வந்து சந்தித்தவர் விஜயகாந்த்; அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியவுடன் நான் அவர் உடல்நலம் விசாரிக்க வந்தேன். இச்சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது என்றார்.