மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராக நிற்பதைவிடவும் வடசென்னை தொகுதி மா.செ சேகர்பாபுவை நினைத்துத்தான் கலக்கத்தில் இருக்கிறார் தயாநிதி மாறன்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, கருணாநிதியை சந்தித்துப் பேசினார் தயாநிதி. அப்போது, ரொம்ப நன்றி தாத்தா...நிச்சயமாக நான் ஜெயிக்க மாட்டேன் எனக் கலங்கிப் போய் பேசி விட்டு வந்தார்.
தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே, தோல்வியை தயாநிதி கணித்துவிட்டார் என்பதை கருணாநிதியாலும் நம்ப முடியவில்லை. இதற்குக் காரணம், சேகர்பாபுவின் உள்ளடி வேலைகள்தான் என உறுதியாக நம்பினார்.
இந்தமுறையும் இதேபோன்று எதாவது செய்வார்கள் என நம்புகிறார். அதற்குக் காரணம் கடந்த சில வாரங்களாக துறைமுகம் தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எழும்பூரில் வைத்து நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார் சேகர்பாபு.
'துறைமுகத்தில் நலத்திட்ட பணிகளைச் செய்யாமல் எழும்பூருக்கு ஏன் வருகிறார் சேகர்பாபு?' என தயாநிதி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்திய சென்னை தொகுதியில் தயாநிதிக்கு எதிரான உள்ளடி வேலைகளைச் செய்வதற்காகவே அவர் எழும்பூரில் பணிகளைச் செய்கிறார் என தயாநிதியின் கவனத்துக்குத் தகவல் கொண்டு சென்றுள்ளனர்.
இதைப் பற்றித் தொடர்ந்து பேசியவர்கள், கடந்தமுறையைப் போல இந்தமுறையும் உங்களுக்கு எதிரான வேலைகளைச் செய்ய இருக்கிறார்கள். எனவே கட்சிக்காரர்களை நம்பாமல் உங்களுக்கு வேண்டியவர்களை வைத்துத் தேர்தல் வேலைகளைச் செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் வெற்றி பெற முடியும் எனக் கூறியுள்ளனர். இந்தத் தகவல்களை குறித்துக் கொண்டாராம் தயாநிதி.
எழில் பிரதீபன்