லோக்சபா தேர்தலில் வடசென்னை தொகுதியை குறிவைத்து களமிறங்கியுள்ளனர் திமுகவின் மூத்த தலைவர்களான இரண்டு வீராசாமியின் புதல்வர்கள்.
தலைநகர் சென்னையின் 3 தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் யாராக இருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்சென்னை லோக்சபா தொகுதியில் எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்குத்தான் அதிக வாய்ப்பாம்.
மத்திய சென்னை தொகுதியைப் பொறுத்தவரை மாறன் குடும்பத்துக்கு நேர்ந்துவிட்ட தொகுதி என்பதால் இம்முறையும் தயாநிதி மாறன் தான் வேட்பாளராம். அவரும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார்.
ஆனால் அவருக்கு எதிராக வடசென்னை சேகர் பாபு உள்ளடி வேலைகளையும் தொடங்கியதையும் நாம் நேற்று பதிவு செய்திருந்தோம். வடசென்னை தொகுதியைப் பொறுத்தவரை திமுகவின் மூத்த தலைவர்களான இரண்டு வீராசாமிகளின் மகன்கள் களத்தில் நிற்கின்றனர்.
ஒருவர் ஆர்க்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி. மற்றொருவர் திமுக மாநில மாணவர் அணி செயலாளர் கவி கணேசன். திருவொற்றியூர் பகுதியில் மூத்த தலைவராக விளங்கிய லேலண்ட் தொழிற்சங்கத் தலைவர் வீராசாமியின் மகன் இந்த கவி கணேசன்.
இந்த இருவரும் தங்களதுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அறிவாலயத்துக்கு மனு அளித்துள்ளனர். திமுக தலைமை யாருக்கு வாய்ப்பு தரும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.