`திருந்தி வந்தால் உதவி செய்ய தயார் - கண்கலங்கிய உறவினரும்.... ராமதாஸின் உறுதியும்...!

ramadoss assured his relation about kaduvetti guru son

by Sasitharan, Mar 2, 2019, 13:05 PM IST

காடுவெட்டி குரு மகன் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சில உறுதிகளை அளித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் காடுவெட்டி குருவுக்கும் நடந்துவரும் மோதல் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. காடுவெட்டி குருவின் மறைவுக்கு பிறகு இரு குடும்பத்தினரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒருபடி மேலாக நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி போட்டியிடும் தொகுதியில் காடு வெட்டி குருவின் உறவினர் அவருக்கு எதிராக களமிறக்கப்படுவார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில், ``மறைந்த குருவின் மூத்த சகோதரி செல்வியின் கணவரும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவருமான கருணாகரன் இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் என்னை சந்தித்துப் பேசினார். அப்போது குரு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகள் குறித்து நிறைய விசயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

குருவின் பெருமைக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், அவரது மற்றொரு சகோதரியின் கணவர் அன்பழகனும், அவரது குடும்பத்தினரும் மற்றவர்களும் செயல்படுவதை எண்ணி தாம் மிகுந்த வருத்தமடைவதாகவும், இதுபோன்று நடக்கும் என்று தாம் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை என்றும் பொறியாளர் கருணாகரன் மிகவும் மனம் நொந்து என்னிடம் கூறினார். குருவின் மகள் விருதாம்பிகையின் திருமணம் குறித்து அந்தக் குடும்பத்தின் முக்கிய நபர்களான குருவின் மனைவிக்கும், தமக்கும் தெரியாது என்றும் வேதனையுடன் அவர் கூறினார். குருவின் மனைவியை விரட்டியடித்துவிட்டு, அவர்களின் சொத்துக்களை பறித்துக்கொள்ள அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் பொறியாளர் கருணாகரன் கூறினார்.

குரு மீது மரியாதையும், அவரது குடும்பத்தினர் மீது அக்கறையும் கொண்டுள்ள பொறியாளர் கருணாகரன், என்னிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். குருவின் மகன் கனலரசனை சீரழித்துவிட்டதாகவும், தமக்கு எதிராக பின்னப்படும் சதி வலையை அவனே உணர்ந்து திருந்தாதபட்சத்தில், அவனையும், அவனது எதிர்காலத்தையும் யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் அவர் வேதனைபட்டார். ஒருவேளை கனலரசன் அவனது தவறுகளை உணர்ந்து திருந்திவந்து உங்களிடம் தஞ்சமடைந்தால் அவனது கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு உதவி செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதைக்கேட்ட நான், குருவின் மகன்மீது நானும், மருத்துவர் அன்புமணியும் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக தெரிவித்தேன். குருவின் மறைவிற்குப் பிறகு அவரது மகன் கனலரசனை அன்புமணி அழைத்து, அவனது கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து 2 மணி நேரம் பேசியதாகவும், குருவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சிறப்பாக படித்து மருத்துவராக ஆகவேண்டும் என்று அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்தேன். கனலரசன் திருந்தி வந்தால் அவனது கல்வி மற்றும் எதிர்காலத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்ய நானும், அன்புமணி காத்திருப்பதாகவும் கருணாகரனிடம் உறுதியளித்தேன். அதற்காக எனக்கு நன்றி தெரிவித்த குருவின் மைத்துனரான பொறியாளர் கருணாகரன், கலங்கிய கண்களுடன் என்னிடம் விடைபெற்றுச் சென்றார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading `திருந்தி வந்தால் உதவி செய்ய தயார் - கண்கலங்கிய உறவினரும்.... ராமதாஸின் உறுதியும்...! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை