`லீவ் கொடுக்கவில்லை அம்மா இறந்துவிட்டார் நானும் சாக போகிறேன் - இன்ஸ்பெக்டர் கொடுமையால் காவலர் வேதனை

police constable attempt suicide for inspector torture

by Sasitharan, Mar 8, 2019, 19:06 PM IST

இன்ஸ்பெக்டர் கொடுமைப்படுத்தியதால் காவலர் ஒருவர் தற்கொலை செய்ய முடிவெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் ராயலா நகர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் பொன்லிங்கம். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இந்நிலையில், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார் பொன்லிங்கம். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், ``நான் ராயலா நகர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிகிறேன். இதற்கு முன் பல ஆய்வாளர்களின் கீழ் பணியாற்றியுள்ளேன். அவர்கள் எல்லாம் குறைகளை கேட்டு நல்ல முறையில் நடத்தினார்கள். ஆனால் இப்போதுள்ள இன்ஸ்பெக்டர் கௌதமனோ என்னை மரியாதை குறைவாக நடத்துகிறார். என் தாயின் உடல்நிலை சரியில்லாத போது அவரை கவனிப்பதற்காக லீவ் கேட்டேன். ஆனால் 15 நாட்கள் ஆன பின்பும் லீவ் தரவில்லை. காலம் கடந்து சென்றதால் என் தாயை காப்பாற்ற முடியவில்லை. சரியான நேரத்தில் லீவ் தராததால் என் தாய் சாவுக்கு இன்ஸ்பெக்டரே காரணம். இதேபோல் எனக்கு சொந்த மாவட்டமான திருநெல்வேலிக்கு டிரான்ஸ்பர் கிடைத்துவிட்டது. டிரான்ஸ்பர் வந்தபின்பும் உனக்கு அதை தரமாட்டேன் என அவதூறாக பேசிவிட்டார்.

இன்று 11.45 மணி வரை போராடி பார்த்தேன். அவமரியாதை மட்டுமே மிஞ்சியது. எனவே என் தாய்க்கு 41வது நாள் சடங்கு முறை கழிக்க விடுமுறை கிடைக்காததாலும் இடமாற்றம் கிடைக்காததாலும் மனஉளைச்சலில் உள்ளேன். இதனால் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். இதற்கு இன்ஸ்பெக்டர் கௌதமன்தான் காரணம்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வலைதளங்களில் இந்தக் கடிதம் வைரலாக காவல் உயர் அதிகாரிகளின் கண்களில் இது பட்டது. இதன்பின் உடனடியாக பொன்லிங்கத்தை இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். காவலர்கள் தொடர் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் காவலர் ஒருவரின் இந்தக் கடிதம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

You'r reading `லீவ் கொடுக்கவில்லை அம்மா இறந்துவிட்டார் நானும் சாக போகிறேன் - இன்ஸ்பெக்டர் கொடுமையால் காவலர் வேதனை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை