ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்களை ஒரு வாரத்தில் தமிழக அரசு விடுதலை செய்யக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி 7 தமிழரை விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழக அமைச்சரவையானது ஆளுநர் பன்வாரிலாலுக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்தது. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் இந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார்.
இது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானது என்பது குற்றச்சாட்டு. மாநில அரசு பரிந்துரைத்த பின்னர் முதலில் நிராகரிக்கரலாம்; இரண்டாவது முறையாக தீர்மானத்தை ஏற்று விடுதலை செய்ய வேண்டும் என்பது ஆளுநரின் கடமை. இதனை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்றுகூட தமிழகம் முழுவதும் 7 தமிழர் விடுதலைக்காக மாநிலம் தழுவிய மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தலை முன்வைத்து அதிமுக அரசு இன்னும் ஒரு வார காலத்தில் 7 தமிழரையும் விடுதலை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால்தான் இன்றைய மனித சங்கிலிப் போராட்டம் பொதுமக்களின் பங்கேற்புடன் மட்டுமே நடைபெறுவதாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது; அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.