உன்னைத்தான் உடன்பிறப்பே...வீணர் அதிர...வீடணர் வீழ..வீரச்சுடர்விழி காட்டு...கருணாநிதி கடிதம் பாணியில் முரசொலி கட்டுரை

Election 2019, Karunanidhi letter on Dmk mouth piece murasoli daily

by Nagaraj, Apr 3, 2019, 13:30 PM IST

மக்களவை மற்றும் சட்டப்பேரவை நெருங்கும் நேரத்தில் தமிழக அரசியல் களம் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் சூடாகிக் கிடக்கிறது. திமுக அதிமுக கூட்டணிகளுக்கு இடையே பெரும் மல்லுக்கட்டு நடக்கிறது.

தனி நபர் விமர்சனங்களால் ஒரு புறம் தகித்துப் போயுள்ளது தேர்தல் களம். மற்றொரு புறம் வருமான வரிச் சோதனைகளால் பல்வேறு இடையூறுகளுக்கும் திமுக ஆளாகியுள்ளது. இந்த நேரத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, உயிரோடு இருந்திருந்தால் இவற்றுக்கெல்லாம் முரசொலி ஏட்டில் எப்படி பதிலடி கொடுத்திருப்பாரோ? அதே பாணியில் கலைஞர் கடிதம் வெளியிட்டுள்ளது முரசொலி நாளேடு.

உன்னைத்தான் உடன்பிறப்பே...
வீணர் அதிர...வீடணர் வீழ..வீரச்சுடர்விழி காட்டு... என்று தொடங்கும் கலைஞர் கடிதம் இதோ: 

உன்னைத்தான் உடன்பிறப்பே!

வீணர் அதிர – வீடணர் வீழ – வீரச்சுடர்விழி காட்டு
இது தி.மு.கழகம் என்பதை நிலைநாட்டு..

- தலைவர் கலைஞர்.

'நானிருக்க பயமேன்' - என்று என் நாக்கு என்றும் முழங்கியதில்லை. 'நீ இருக்க பயமேன்' என்றுதான் நிம்மதியாக நான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

வறுமைக்கும், வாட்டத்துக்கும் காரணம் என்ன? அதற்கு நமக்குக் கிடைத்த பதில் விதி.

ஒருவன் வாழவும், ஒருவன் வாடவுமான நிலை இருப்பானேன்? அது தலை எழுத்து! உயர் சாதிக்காரன், தாழ்ந்த சாதிக்காரன் என்ற கேடு உலவிடுவானேன்? அதுவா? அது போன ஜென்மத்துப் பலன்!

இப்படிப்பட்ட ஆணவம் நிறைந்த பதில்கள், அறியாத மக்களின் உடலிலே, உள்ளத்திலே சவுக்கடிகளாக விழுந்து கொண்டிருந்தன.

அதைத் தடுத்து நிறுத்தப் பாடுபட்டதுதான் நமது பகுத்தறிவு இயக்கம்.

வாழ்ந்த நாளெல்லாம் நினைவில் மட்டுமல்ல; கனவுகளிலும் அதே சிந்தனையோடு வாழ்ந்தேன் என்பதை என்னை முற்றிலும் உணர்ந்த நீ அறிவாய்! நமது கழக அரசு இந்த அடிப்படை உணர்வுகளின் தாக்கத்தால் செய்துள்ள சாதனைகளை எண்ணிப்பார்!

உடன்பிறப்பே! அது அத்தனையும் சரித்திரச் சான்றுகள் அல்லவா! நாம் தொடங்கி நடைபெற்ற தமிழக வளர்ச்சி இன்று முடங்கிப் போய் கிடக்கிறது!

'உறவுக்குக் கை கொடுப்போம்
உரிமைக்குக் குரல் கொடுப்போம்'

என உரக்க ஒலித்த குரல் மாறி,

'உரிமைகளைப் பறிகொடுத்து உறவுக்குக் கால் பிடிப்போம்'

- என மாறிவிட்ட அவல நிலையை நீ உணர்வாய்!' சமுதாய ஆதிக்கக்காரர்கள், சமுதாயத்தின் அடிமட்டப் பகுதியினரை ஒருவருக்கொருவர் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் இந்தப் பிரித்தாளும் அரசியலுக்கு ஒரு முடிவு ஏற்படும் வரை, நம் இயக்க நோக்கத்துக்கு ஒரு முழு வடிவம் அமைப்பது இயலாது என்பதை நீ அறிவாய்!

அன்பு உடன்பிறப்பே!

இன்று கழகத்தினரையும், கழகத்தையும் களங்கம் கற்பித்து அழித்து விடலாமென்று பார்க்கிறார்கள். காலை, மாலை எந்நேரமும் அவதூறுப் பிரச்சாரம்.

சோதனைகள் என்ற செய்திகள்! அதனைத் தொடர்ந்து மஞ்சள் ஏடுகளிலும், ஆதிக்க சக்திக்கு அடி வருடும் ஊடகங்களிலும் ஆயிரம் கற்பனைப் பொய்யுரைகள்.

இவை எல்லாம் இன்றல்ல; காலங்காலமாக நாம் சந்தித்து எதிர்கொண்டவை! நம்மைத் திசை திருப்ப எதிரிகள் நடத்தும் சூழ்ச்சிகள்! பாவம், “பரிதாபத்துக்குரியவர்கள்' என்று அவர்களை அலட்சியப்படுத்துவோம்! எரிச்சல்காரர்களுக்கு மத்தியில் ஏறு நடைபோட்டு. எழுச்சி முரசு கொட்டி, நமது வலிமையை மேலும் பெருக்குவோம் அன்பான உடன்பிறப்பே!

நீ அதனைச் செய்வாய் என்ற நிறைந்த நம்பிக்கை எனக்கு உண்டு! வெற்றி நமதே! வீணர் அதிர - வீடணர் வீழ - வீரச் சுடர்விழி காட்டு! இது தி.மு.கழகம் என்பதை நிலை நாட்டு!

You'r reading உன்னைத்தான் உடன்பிறப்பே...வீணர் அதிர...வீடணர் வீழ..வீரச்சுடர்விழி காட்டு...கருணாநிதி கடிதம் பாணியில் முரசொலி கட்டுரை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை