ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருளின் வயது கிமு 791 -தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என நிதிபதிகள் கருத்து

central government submit report found that adichanallur metal age 791

by Suganya P, Apr 4, 2019, 08:00 AM IST

ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை  'கார்பன் பகுப்பாய்வு' செய்து அதன் காலத்தை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு.

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி16 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அதன் முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்று எழுத்தாளர் காமராஜ் என்பவர், உயர் நீதிமன்ற  மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான ஆதிச்சநல்லூரில், இதுவரை 4 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளது. அகழாய்வில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. அதனால், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த வேண்டும்; முன் நடத்தப்பட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், தூத்துக்குடி சிவகளை, பரம்பு ஆகிய பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரித் தனி மனு ஒன்றையும் காமராஜர் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த பிப்ரவரி-15 ம் தேதி நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ் சுந்தர் அமர்வு முன் வந்தது. அப்போது, ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நீதிபதிகள் அமர்வு முன் வந்தது. அப்போது, ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் சிலவற்றை  'கார்பன் பகுப்பாய்வு'-காக புளோரிடாவிற்கு அனுப்பப்பட்ட இரண்டு பொருட்களின் முடிவுகளை மத்திய அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து. அதில், ஒரு பொருளின் வயது கிமு 905, மற்றொன்றின் வயது கிமு 791 எனத் தெரியவந்துள்ளது. அதோடு, இது சம்பந்தமான விரிவான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இந்த வழக்கில், தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆஜரான  வழக்கறிஞர்  சிவகளையில்  கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.மு 395 ஆண்டு பழமையானவை எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள், தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி எனத் தெரிய வருகிறது எனக் கருத்து தெரிவித்தனர். ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணிகள் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வரும் ஏப்ரல் 11-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். 

You'r reading ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருளின் வயது கிமு 791 -தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என நிதிபதிகள் கருத்து Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை