திமுக தலைவர் ஸ்டாலின் தமக்கு எதிராகப் பொய் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தோல்வி பயத்தினாலேயே பொய் பரப்புரைகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர் எனவும் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் தம்பிதுரை. இதே தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரான ஜோதிமணி போட்டியிடுகிறார். தமிழகத்திலேயே அதிகபட்சமாக 42 பேர் போட்டியிடும் இத்தொகுதியில் அதிமுக - காங்கிரஸ் இடையில் நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள தம்பிதுரை, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமக்கு எதிராகப் பொய் பரப்புரையில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். தமக்குச் சொந்தமாக 45 கல்லூரிகள் இருப்பதாகவும், இந்த கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என ஸ்டாலின் சொல்லி வருகிறார். அந்த கல்லூரிகளின் விவரங்களை ஸ்டாலினை தரச் சொல்லுங்கள். தமக்குச் சொந்தமாகப் பல கல்லூரிகள் இருப்பதை ஸ்டாலின் நிரூபித்து விட்டால் தாம் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று சவால் விடுத்துள்ளார் தம்பிதுரை.
அதோடு, பொய் பேசி மக்களை ஏமாற்றுவது கொஞ்ச நாள்தான் எடுபடும். தவறான, தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ந்து பொய் பரப்புரையை, ஸ்டாலினும் திமுகவினரும் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால், அவர்கள் மீது உச்ச நீதிமன்றத்திலோ அல்லது உயர் நீதிமன்றத்திலோ மானநஷ்ட வழக்கு விரைவில் தொடரப்படும் எனக் கூறிய தம்பிதுரை, இரட்டை இலையைத் தோற்கடிக்க உலகத்தில் யாரும் பிறக்கவில்லை எனத் தெரிவித்தார்.