சமீபகாலமாக தமிழகத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதனால் சிறுமிகளுக்கு தமிழகம் பாதுகாப்பான மாநிலமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனை தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களும் உறுதி செய்கின்றன.
தமிழகத்தில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்குபவர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்கின்றனர். பெரும்பாலும் மகளிர் காவல் நிலையங்களில் உள்ள பெண் ஆய்வாளர்களால் மட்டுமே போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 385 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 175 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதாகி உள்ளனர். அதேசமயம் கடந்த 1ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலான 21 நாட்களில் அந்த காவல் நிலையங்களில் மொத்தம் 355 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் அதிகரித்து இருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க வேறு என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று யோசிக்க வேண்டிய நிலையும் இப்போது ஏற்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.