அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காந்தி பாலிகா வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் இந்திரா காந்தி உள்ளிட்ட நான்கு ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத காரணத்திற்காக தங்களை பணிநீக்கம் செய்வதற்கு தடை கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதோடு, 2019ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தங்களை பணிநீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2011ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவையால் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2012, 2013, 2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ளது. மார்ச் 31ம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்க அவகாசம் வழங்கியது மத்திய அரசு. அதன் பின் காலக்கெடுவை நீட்டிக்க மறுத்து விட்டதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க முடியாது என்று மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி, ‘’ தகுதித் தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்குக் காத்திருக்கும் நிலையில் தகுதித் தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க எந்த காரணமும் இல்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். நோட்டீசுக்கு பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் வழங்கி, அவர்களின் பதிலைப் பெற்ற பின் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும், தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்குக் கருணை காட்ட முடியாது என்றும் கூறினார்.