பா.ஜ.க.வுக்கு மாறப் போகிறனோ? ஓ.பன்னீர்செல்வம் கதறுவது ஏன்?

Will o.p.s. join bjp after the outcome of poll results? He firmly denies.

by எஸ். எம். கணபதி, May 2, 2019, 09:46 AM IST

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வை விட்டு விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்து விடுவார் என்ற பேச்சு அடிபடவே, அவர் அவசர, அவசரமாக அதை மறுத்துள்ளார். ஆயுள்காலம் முழுவதும் அ.தி.மு.க.வில்தான் இருப்பேன் என்றும், தன் உயிர் போனாலும் அ.தி.மு.க. கொடியைத்தான் போர்த்த வேண்டுமென்றும் உருக்கமாக அறிக்கை விட்டிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.தான் மீண்டும் அமோக வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகவும் பலமிழந்து போய் விட்டன என்றும் கடந்த சில மாதங்கள் முன்பு வரை பேசப்பட்டது. ஆனால், ஏழு கட்டத் தேர்தலில் ஒவ்வொரு கட்டமும் முடிய, முடிய பா.ஜ.க.வின் நிலை மோசமாகி கொண்டே வருவது போன்றும், எதிர்க்கட்சிகள் இணைந்தே ஆட்சி அமைக்கும் என்றும் பேச்சு அடிபட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மதில் மேல் பூனையாக அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 22 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல்களில் குறைந்தது ஏழெட்டு இடங்களை கைப்பற்றினால்தான் ஆட்சி தப்பிக்க முடியும்ம என்ற சூழல் உள்ளது. ஆனால், மக்களிடம் கடுமையான எதிர்ப்பை கொண்டுள்ள பா.ஜ.க.விடமும், அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்த பா.ம.க, தே.மு.தி.க.விடமும் கூட்டணி வைத்ததால், தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, அ.தி.மு.க.வில் தேர்தலில் தோற்றால் என்ன செய்வது என்று யோசிப்பது ஒரு புறமிருக்க, இ.பி.எஸ்= ஓ.பி.எஸ் அணிகளுக்கு இடையேயான உட்பூசலும் மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களில் மனோஜ்பாண்டியன், கே.பி.முனுசாமி ஆகியோருக்கு மட்டும்தான் தேர்தலில் சீட் கிடைத்தது. தேர்தல் பிரச்சாரத்திலேயே ஓ.பி.எஸ்.சை விட இ.பி.எஸ். கையே ஓங்கியிருந்தது. தேர்தல் முடிவுகளிலும், டி.டி.வி.தினகரன் மிகவும் பலமாக இருக்கும் தென்மாவட்டங்களில் அ.தி.மு.க. அதிகமாக தோற்க வாய்ப்புள்ளது. அதே சமயம், கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. எனவே, தேர்தல் முடிந்ததும் இ.பி.எஸ். மேலும் பலமாகி விடுவார். அப்போது ஓ.பி.எஸ் சுத்தமாக ஓரங்கட்டப்படுவார் என்றும், அதனால் அவர் பா.ஜ.க.வுக்கு தாவி விடுவார் என்றும் அ.தி.மு.க.வில் பரபரப்பாக பேசப்படுகிறது. இ.பி.எஸ். ஆதரவாளர்களே இதை வேகமாக பரப்பி வருகிறார்கள்.

இதை உறுதிப்படுத்துவது போல், வாரணாசியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியிலும், அதற்கு முதல் நாள் நடந்த பா.ஜ.க. பேரணியிலும் ஓ.பி.எஸ். தனது மகன் ரவீந்திரநாத்துடன் பங்கேற்றார். அது மட்டுமல்ல. இருவரும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசினர்.


இந்த சூழலில், மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்க முடியாமல் போனாலும், தமிழகத்தில் அ.தி.மு.க அணி மோசமாக தோற்றாலும் ஓ.பி.எஸ்.சுக்கு பா.ஜக.விலும் மரியாதை இருக்காது. இதை உணர்ந்த அவர் அவசர, அவசரமாக தன் மீதான யூகங்களை மறுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

அ.தி.மு.க.வின் ஒரு சாதாரண தொண்டனாக பணியாற்றி பெரியகுளம் நகராட்சி தலைவராகவும், வருவாய்த்துறை அமைச்சராக, நிதி அமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக, இவையாவிற்கும் மேலாக ஜெயலலிதா வீற்றிருந்த முதல்வர் இருக்கையில் 3 முறையும், அ.தி.மு.க.வின் பொருளாளராக 12 ஆண்டுகளுக்கு மேலாக என்னை அமர்த்தியும், எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்துக்கு இன்று ஒருங்கிணைப்பாளராகவும், ஏராள வாய்ப்புகளை எனக்கு வழங்கி என் கனவிலும் நான் எதிர்பாராத உயரங்களை தந்த இந்த இயக்கத்தை விட்டு நான் பா.ஜ.க.வுக்கு செல்லப்போகிறேன் என்று ஒரு அடுக்காத புரளி அவதூறாக பரப்பப்படுகின்றன.

என் குடும்பம் மட்டுமல்ல என் வம்சாவளிகளும் எத்தனை தலைமுறைக்கு இந்த இயக்கத்திற்கு நன்றிக்கடன் செலுத்தினாலும் அது போதாது போதாது என்பதை என் உதிரத்தில் கலந்த உறுதியை கொண்டவன் நான்.

ஜெயலலிதா அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் எதிர்நிலைகள் கொண்ட போதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், மாநிலங்களவையில் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த ஏராளமான தீர்மானங்களை அ.தி.மு.க. வின் வலுவான ஆதரவால் நிறைவேற்றி கொடுத்தவர் ஜெயலலிதா.

அதுபோலவே ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியவர் நரேந்திர மோடி. எனவே, நான் வணங்கும் என் தலைவி மதித்த தலைவர்கள் மீது நானும், எனது இயக்கமும் அன்பு காட்டுவது எங்கள் தாயின் வழியை பின்பற்றுகிறோம் என்பதையும், அ.தி.மு.க.வின் அரசியல் எதிர்காலத்திற்கு உகந்த முடிவாக இருக்கிறதா என்பதை உரசிப் பார்த்தும், தொண்டர்களிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் கருத்துக்களை உள்வாங்கி கொண்டும்தான்.

ஜெயலலிதா வகுத்து கொடுத்த பாதத் தடத்தில் அ.தி.மு.க.வின் பிரகாசமான எதிர்காலத்துக்காக நாங்கள் மேற்கொண்டு வரும் ஒரு இணக்கத்தையும், நாங்கள் மெகா கூட்டணி ஈட்ட இருக்கும் வெற்றியை நினைத்து குலை நடுக்கம் கொள்ளும் சில குள்ள நரிகள் என் மீது வதந்திகளை பரப்பி என்னையும், என் அரசியல் வாழ்க்கையையும் காயப்படுத்த அலைவதை நினைத்து மிகுந்த வேதனை கொள்கிறேன்.

என் உயிர் போகும் நாளில் அ.தி.மு.க.வின் கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக கொண்டு வாழும் இந்த எளியவனை கட்சி மாறப்போகிறேன், வேறு கட்சிக்கு போகப்போகிறேன் என்றெல்லாம் வடிகட்டிய பொய்யை வதந்திகளாக்கி ஊடகங்கள் கூட நடுநிலை என்பதை மறந்து யாருக்கோ வால்பிடித்து புரளியால் குறளி வித்தை செய்வதை நினைத்து மிகுந்த வேதனை அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தேர்தல் முடியும் முன்பே அ.தி.மு.கவில் சலசலப்புகள் ஏற்பட்டிருப்பது தி.மு.க.வினருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

உளவுத் துறை ஐ.ஜி.யை மாற்றுவதற்கு தேர்தல் ஆணையம் தயங்கியது ஏன்?

You'r reading பா.ஜ.க.வுக்கு மாறப் போகிறனோ? ஓ.பன்னீர்செல்வம் கதறுவது ஏன்? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை