லஞ்சம், ஊழலை ஒழிக்கணும்னா, பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் வியாபாரம் செய்யும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் ஒழித்தால் தான் முடியும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.
4 தொகுதி இடைத்தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரேவதியை ஆதரித்து நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திமுகவையும், அதிமுகவையும் விளாசித் தள்ளினார்.
நாங்கள் மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக போராடுகிறோம். ஆனால் திமுகவும், அதிமுகவும் பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் வியாபாரம் செய்கின்றனர். அப்புறம் எப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும்.
திமுகவுடனோ, அதிமுக வுடனோ சேர்ந்து லஞ்சத்தை ஒழிக்க முடியாது. ஊழலை ஒழிப்பதற்கு ஒரே வாய்ப்பு அந்த கட்சிகளை ஒழிப்பதுதான்.
இதற்கெல்லாம் காரணம் மக்கள் நல்ல தலைவனை தேடாதது தான்.எல்லோருக்கும் தேடல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எதிர்காலத்தை தீர்மானிக்க தலைவனை மட்டும் தேட மக்களுக்கு தெரியவில்லை.வருமானமா, இனமா என்று பார்க்கும் போது கமல்ஹாசன்,ரஜினிகாந்த் பணத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கும் போது இனத்தை தேடி, நான் பத்தாண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறேன்.
உரிமைகளை பறிகொடுப்பது ஆட்சியல்ல. எதிர்காலத்திற்கு தேவையான உரிமைகளை பாதுகாப்பதே சிறந்த ஆட்சி.திராவிடக் கட்சிகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றவே நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.நாம் தமிழர் கட்சியை குறை கூறுவது திராவிடக் கட்சிகளின் இயலாமை என்றும் சீமான் பேசினார்.