அன்னபூரணி கோயில் கல்வெட்டில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று தன்னை குறிப்பிட்டதற்கு ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் காசி அன்னபூரணி கோயில் உள்ளது. இங்கு கடந்த 2நாள் முன்பாக 2 கல்வெட்டுகள் திறக்கப்பட்டன. அதில் ஒன்றில் கோயிலுக்கு பேருதவி புரிந்தவர் என்று ஜெயலலிதா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு கல்வெட்டில் பேருதவி புரிந்தவர்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய மகன்களான ரவீந்திரநாத் குமார், ஜெய பிரதீப் குமார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
அதில், ரவீந்திரநாத் பெயருக்கு மேல் தேனி பாராளுன்ற உறுப்பினர் என எழுதப்பட்டிருந்தது. மே 23ம் தேதி தான் வாக்கு எண்ணிக்கையே நடக்கவிருக்கிறது. அதற்குள் அவரை எம்.பி.யாக சித்தரித்து கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதற்கு அ.ம.மு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில், கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட போலீஸ்காரர் வேல்முருகன் என்பவர் அந்த கல்வெட்டை வைத்தது என்று தெரியவந்தது.
இந்நிலையில், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் விடுத்த அறிக்கையில், ‘‘குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலய கல்வெட்டு பற்றி எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது, இந்த நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.