கல்லூரி திறந்த முதல் நாளே அட்டூழியம்..? பதற வைத்த மாணவர்கள்... கைது செய்த போலீஸ்

Chennai college students atrocities on opening day

by Nagaraj, Jun 18, 2019, 13:17 PM IST

சென்னையில் கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே 'பஸ் டே' என்ற பெயரில் பேருந்துகளின் கூரைகளில் ஏறி அட்டூழியம் செய்த மாணவர்கள், கொத்தாக கீழே விழுந்த காட்சி காண்போரை பதறச் செய்து விட்டது. தடையை மீறி அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோடை விடுமுறைக்குப் பின் சென்னையில் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் மாணவர்கள் கொண்டாட்டத்துக்கும், உற்சாகத்துக்கும் அளவே இல்லாமல் போய்விட்டது. குறிப்பாக பச்சையப்பா கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, புதுக்கல்லூரி, பிரசிடென்சி போன்ற கல்லூரிகளின் மாணவர்களின் அட்டூழிழியம் எல்லை மீறிப் போய்விட்டது என்றே கூறலாம்.

தாங்கள் வழக்கமாக கல்லூரிக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளை மலர் மாலை, பேனர், காகிதப் பூக்களால் அலங்கரித்து 'பஸ் டே' என்ற பெயரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்பார். பேருந்துகளின் மேற்கூரையில் ஏறி ஆட்டம், பாட்டத்துடன் மாணவர்கள் அமர்க்களம், ரகளை செய்த காட்சிகள் பொது மக்களையும், பிற பயணிகளையும் முகம் சுளிக்கச் செய்து விட்டது என்றே கூறலாம். இது போன்ற கொண்டாட்டங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தும் மாணவர்கள் அதை பொருட்படுத்துவதாவே தெரியவில்லை. தடையை அமல்படுத்த வேண்டிய போலீசாரும் இதனை கண்டும் காணாமல் வேடிக்கை பார்ப்பது தான் கையாலாகாத்தனம் என்பதாகும்.

சென்னையில் மாணவர்கள் நடத்திய இந்த அட்டூழியத்தின் போது அனைவரையும் பதற வைத்த காட்சி ஒன்றும் அரங்கேறியது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஒரு பேருந்தின் மேற்கூரையில் இடம் கொள்ளாத அளவுக்கு நெருக்கியடித்தபடி ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டம் என்று சென்றனர். அப்போது திடீரென கொத்தாக மாணவர்கள் சரிந்து பேருந்தின் முன் பக்கமாக சாலையில் விழுந்தனர். இதைக் கண்டவர்கள் பதறினர்.நல்லவேளையாக பேருந்து மெதுவாகச் சென்றதால் யாருக்கும் ஆபத்தில்லாமல் போய்விட்டது.இந்தக் காட்சியைக் கண்ட பொதுஜனங்கள் தான் பதறினார்களே ஒழிய, 15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த பதற்றம் கொஞ்சமும் இல்லாமல் மாணவர்கள் மீண்டும் ஆட்டம் பாட்டத்தை தொடர்ந்தது தான் கொடுமையிலும் கொடுமை. இவ்வளவும் அரங்கேறிய பின்னரே மாணவர்கள் 13 பேரை போலீசார் கைது செய்து வழக்குப் போட்டுள்ளனர்.

இளங்கன்று பயமறியாது என்பது உண்மைதான். அதற்காக உயிரைப் பணயம் வைத்து இது போன்ற விபரீத விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் போலீசாவது சட்டத்தின் மூலம் தடுக்க வேண்டும் .

You'r reading கல்லூரி திறந்த முதல் நாளே அட்டூழியம்..? பதற வைத்த மாணவர்கள்... கைது செய்த போலீஸ் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை