மளிகைக் கடையில் வேலையை தொடங்கி உயரம் தொட்ட ராஜகோபால்

saravana bhavan rajagopal started his in a small crosery shop

by எஸ். எம். கணபதி, Jul 18, 2019, 12:55 PM IST

சாதாரண மளிகைக் கடையில் வேலையை தொடங்கி, இன்று வெளிநாடுகளிலும் கிளையைக் கொண்ட சரவண பவன் ஓட்டலின் உரிமையாளர் ராஜகோபால் வாழ்க்கை வரலாறு ஒரு படிப்பினை.

தமிழகத்தில் தென்கோடியில் புன்னையடி என்ற குக்கிராமத்தில் 1947-ம் ஆண்டு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜகோபால். குடும்பத்தின் வறுமையால் ஏழாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்தி விட்டு, சென்னைக்கு வேலை தேடி வந்தார். சென்னை கே.கே.நகரில் ஒரு மளிகைக் கடையில் வேலைக்கு சேர்ந்தார். கொஞ்ச நாள் வேலை பார்த்து அனுபவம் பெற்ற பின்பு, சிறிது பணம் சேர்த்து தனது மைத்துனரின் உதவியுடன் சொந்தமாக ஒரு மளிகைக் கடையை ஆரம்பித்தார். அதற்கு அவரது தந்்தையும் உதவி வந்தார்.

ஆனாலும், கடும் போட்டிக்கிடையே கடையை திறம்பட நடத்தி, சம்பாதிக்கும் பணத்தை சேமித்தார்.

ஒரு நாள் கடையில் வேலை பார்த்தவர், ‘இந்்த பகுதியில் ஒரு நல்ல ஓட்டலே இல்லை. தி.நகரில்தான் நல்ல சைவ ஓட்டல் இருக்கிறது. இங்கே ஓட்டல் போட்டால் நன்றாக ஓடும்’’ என்று கூறியிருக்கிறார். அப்போதுதான், நாம் ஓட்டல் தொடங்கினால் என்ன என்று ராஜகோபால் நினைத்தார். அதன் விளைவாக, 1981ம் ஆண்டில் சின்னதாக சரவண பவன் ஓட்டலை தொடங்கினார்.

அந்த ஓட்டலில் தரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார் ராஜகோபால். காலை 7 மணிக்கு காபி குடிப்பதற்க்காகவே அந்த ஓட்டல் வாசலில் அப்படி ஒரு கூட்டம் சேரும் என்பார்கள். உணவின் தரம், வாடிக்கையாளர்களிடம் நல்ல அணுகுமுறை என்று அவர் முழுக் கவனம் செலுத்தியதால், ஒரு முறை வந்த வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்கள்.

காய்கறிகள், மளிகைச் சாமான்கள் திடீரென விலை உயர்ந்தாலும் உணவு வகைகளை அதே தரத்தில் ராஜகோபால் விற்பனை செய்தார். இதில் அவருக்கு நஷ்டம் கூட ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம், தரத்தின் காரணமாக விற்பனை அதிகரித்து ெகாண்டே போனது. அதுவே அவருக்கு விலைகளை உயர்த்திக் ெகாள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

வாழை இலை போட்டு சாப்பாடு வைப்பது எல்லா ஓட்டல்களிலும் பார்ப்பதுதான். ஆனால், டிபன் வைக்கும் தட்டில் வாழை இலையை ‘கட்’ செய்து வைக்கும் முறையை ராஜகோபால்தான் ஆரம்பித்து வைத்தார். அது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, அந்தத் தட்டைக் கழுவும் ஊழியர்களுக்கும் வேலை எளிதானது. அதே போல், ஓட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு முடிதிருத்துவது, சீருடை அணிவது, குளித்து பக்தி பரவசமாக காட்சி தருவது என்று பல கட்டுப்பாடுகளை விதித்தார். அதே சமயம், மற்ற ஓட்டல்களை விட அதிக சம்பளம் ெகாடுத்தார். ஊருக்கு செல்லும் போது பணம் கொடுப்பது, குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என்ற பல வழிகளில் ஊழியர்களையும் கவனித்து கொண்டார்.

இப்படி ஆண்டுக்கணக்கில் தானும் கடினமாக உழைத்ததன் விளைவாக இன்று சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கிளைகள், காஞ்சிபுரம், டெல்லி என்று பல ஊர்களிலும் கிளைகள், துபாய் உள்பட வெளிநாடுகளிலும் கிளைகள் என்று ஓட்டல் சரவண பவன் பரந்து விரிந்து ஒரு பெரிய கம்பெனியாக உருவெடுத்துள்ளது.

இப்படி உழைப்பால் உயர்ந்த ராஜகோபாலுக்கு ஒரு சின்ன சபலத்தால், வாழ்வில் மிகப் பெரிய அடி விழுந்தது. தனது ஓட்டலில் பணியாற்றிய ஒரு உதவி மேலாளர் மூலமாக ஜீவஜோதி என்ற இளம்பெண்ணை சந்தித்தார். அந்த பெண்ணை மணமுடிக்க விரும்பினார். அதற்காக ஜீவஜோதியின் தாயை அணுகினார். அதன்பின், அவர்களுக்கு ஒரு டிராவல்ஸ் வைத்து கொடுத்து உதவியதாகவும் கூறப்பட்டது. ஆனால், ஜீவஜோதியோ தனது காதலர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்து ெகாண்டார்.
இதனால் மனம் வெறுத்த ராஜகோபால், அடியாட்களை ஏவி, சாந்தகுமாரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. பிரின்ஸ் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று ெகாலை செய்திருக்கிறார்கள் என்று காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில் 2009-ல் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், ராஜகோபால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், அவருக்கும், மற்றவர்களுக்கும் விதிக்கப்பட்ட தண்டனை உச்சநீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், உடல்நிலை மோசமானதால், அவரை போலீஸ் காவலில் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

அதன்பிறகு நீதிமன்ற அனுமதி பெற்று வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து விட்டார்.
சொத்து, கல்வி என்ற எதுவுமே இல்லாவிட்டாலும் கடின உழைப்பால் ஒரு மனிதன் எந்த அளவுக்கு உயரலாம் என்பதை ராஜகோபால் அண்ணாச்சியின் வாழ்க்கை எடுத்து காட்டும். அதே போல், எந்த உயரத்திற்கு சென்றாலும் சபலத்திற்கு ஆளானால் என்ன நிலை வரும் என்பதையும் அவரது வாழ்க்கை சுட்டிக்காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

சரவணபவன் ராஜகோபால் உடனே சரணடைய உத்தரவு; சுப்ரீம் கோர்ட் அதிரடி

You'r reading மளிகைக் கடையில் வேலையை தொடங்கி உயரம் தொட்ட ராஜகோபால் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை