அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மீதான ஊழல் புகாரை விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கீழமை நீதிபதிகள் மீது ஊழல் புகார்கள் எழுந்தால், அது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரிக்கப்படும். அதே போல், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது புகார் எழுந்தால், உச்ச நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். சி.பி.ஐ. உள்ளிட்ட எந்த விசாரணை அமைப்பும் நேரடியாக நீதிபதிகள் மீது விசாரணை நடத்த முடியாது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி எஸ்.என்.சுக்லா, ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எம்.பி.பி.எஸ். அட்மிஷனுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்தார். அது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும், இந்த விவகாரத்தில் லஞ்ச ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, மாநில அட்வகேட் ஜெனரல் ராகவேந்திர சிங், தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பினார்.
அந்த புகார் குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி ஜெய்ஸ்வால் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் நியமித்தார்.
இந்த குழுவின் விசாரணையில் ஊழல் நடைபெற்றதற்கான அடிப்படை ஆதாரம் உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, இது பற்றி ஆரம்பக் கட்ட விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. விசாரித்து ஊழலுக்கான அடிப்படை ஆதாரம் உள்ளதாகவும், நீதிபதி சுக்லா மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கை அளித்தது. இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்
கடந்த 1991ம் ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கே.வீராசாமி மீது ஊழல் புகார் எழுந்தது. அது பற்றி விசாரிக்க அப்போதைய தலைமை நீதிபதி அனுமதியளித்தார். அதற்கு பிறகு, பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீதான ஊழல் புகாரை இப்போதுதான் சி.பி.ஐ. நேரடியாக விசாரிக்கப் போகிறது.
ஜனநாயகத்தின் அடிப்படையே பலவீனமாகி விட்டது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு