அத்திவரதர் தரிசனம் நாளை முடிகிறது 86 லட்சம் பேர் வழிபாடு

by எஸ். எம். கணபதி, Aug 15, 2019, 09:37 AM IST

அத்திவரதரை நேற்று வரை 85 லட்சத்து 80 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இன்று வெண்பட்டில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். நாளை வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. நாளை மறுநாள் அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறார்.

வைணவர்களால் 108 புண்ணிய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் குளத்தில் இருந்து வெளியே வந்த அத்திவரதர், இம்மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனக் கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், ஆக.1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.

வெளிமாநிலங்களில் இருந்தும் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்து விட்டு செல்கி்ன்றனர். தினமும் ஏராளமான வி.ஐ.பி.க்களும் வந்து தரிசிக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் ரஜினி வந்து தரிசனம் செய்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகன் குமாரசாமி ஆகியோர் நேற்று வந்து தரிசனம் செய்தனர்.

இன்று ஆடி கருட சேவை என்பதால், பகல் 12 மணிக்கு அத்திவரதர் தரிசனத்திற்கான கிழக்கு கோபுரம் மூடப்படுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கருட சேவை வைபவம் நடைபெறும். இரவு 8 மணிக்கு மீண்டும் அத்திவரதர் தரிசனம் தொடங்கும். நாளை(ஆக.16) வி.ஐ.பி.க்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. நாளை, பொது தரிசனத்தி்ற்கு வருபவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். வரும் 17ம் தேதியன்று பொது தரிசனமும் நடைபெறாது.

அன்று ஆகம விதிகளின்படி குளத்தில் அத்திவரதரை வைக்கும் நிகழ்வு நடைபெறும்.
அத்திவரதரை நேற்று வரை 85 லட்சத்து 80 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாக காஞ்சி மாவட்டக் கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இன்றும், நாளையும் மேலும் 5 லட்சம் பேர் தரிசனம் செய்ய வாய்ப்புள்ளது. இதற்கிடையே, அத்திவரதர் தரிசனத்தை மேலும் 24 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. மேலும், அத்திவரதர் வைக்கப்படும் அனந்தசரஸ் குளத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்ப வேண்டும் என்றும், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் அந்த தண்ணீரை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அத்திவரதர் 46வது நாள் தரிசனத்தில் வெண்மை நிறப் பட்டு உடுத்தி காட்சியளிக்கிறார்.

அத்திவரதரை நள்ளிரவில் தரிசித்தார் ரஜினி


More Tamilnadu News