காஞ்சிபுரத்தில் 47 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் தரிசனம் நள்ளிரவில் நிறைவுபெற்றது. இன்று மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ல் தான் பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் ஆதிமூலவரான அத்திவரதர் சிலை, அந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில், ஒரு தனி நீரடி மண்டபத்தில் வைக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்கு வெளியே எழுந்தருள செய்யப்படும்.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜுலை 1-ந்தேதி தொடங்கியது. 31 நாட்கள் சயனக்கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், கடந்த 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அத்தி வரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியை தாண்டியது.
அத்திவரதர் தரிசனத்தின் கடைசி நாளான நேற்றும் பக்தர்கள் கூட்டம் ? இருந்தது. இதனால் நேற்று விஐபி, விவிஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டு பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால் 5 கி.மீ. தூரத்துக்கு வரிசையில் நின்ற பக்தர்கள், ரோஜா வண்ண பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதரை தரிசித்தனர். கிழக்கு கோபுர வாயில் வழியாக மட்டும் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் நேற்று தரிசனம் செய்த நள்ளிரவையும் தாண்டி அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வி.ஐ.பி. தரிசனம் இல்லாததால் பொதுதரிசனப் பாதையில் வந்தவர்கள் 2 மணி நேரத்தில் சுவாமியை தரிசித்து திரும்பினர். கொட்டும் மழையிலும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த நிலையில் இரவு ஒன்பது மணிக்கு கோவிலின் கிழக்கு ராஜகோபுர நடை சாத்தப்பட்டது. அதன் பின்னர் கோவிலின் உள் பிரகாரத்தில் உள்ள பக்தர்கள் மட்டுமே தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. நள்ளிரவையும் தாண்டி நடைபெற்ற சுவாமி தரிசனம் ஒரு மணியளவில் நிறைவுபெற்றது.
விழாவின் 48 வது நாளான இன்று காலை சிறப்பு பூஜையும், யாகமும் நடத்தப்படுகிறது. இரவு 9 மணிக்கு அத்திவரதரை, கோவிலுக்குள் உள்ள அனந்தசரஸ் குளத்திற்கு எழுந்தருளச் செய்யும் பணி தொடங்கி இரவு 11 மணிக்கு நிறைவடைகிறது. இதில் கோவிலைச் சார்ந்த பட்டாச்சார்யார்கள் 80 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இன்று அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படும் அத்திவரதரை மீண்டும் காண இன்னும் 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.