தூத்துக்குடி மக்களின் உயிருக்கு உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலை

Advertisement

தூத்துக்குடியின் எமன்... தாமிர உருக்கு ஆலை ஸ்டெர்லைட் ஆலை பற்றிய தொகுப்பு...

ஸ்டெர்லைட் தூத்துக்குடி வந்த வரலாறு...

லண்டனில் குடியேறிய இந்திய தொழிலதிபர் அனில் அகர்வால், இவரது சொந்த நிறுவனம் 'வேதாந்தா குழுமம்' என்கிற சுரங்கத்தொழில் நிறுவனம். இது கனிமவள உலோகங்களை கொண்டு உலக அளவில் தொழில் செய்யும் நிறுவனமாகும். இது லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. அதில் ஒரு கிளை நிறுவனம் தான் காற்றில் கலந்து முத்துநகத்தை காவு வாங்கிக் கொண்டிருக்கும் தாமிர உருக்கு ஆலை எனும் 'ஸ்டெர்லைட் நிறுவனம்' ஆகும்.

இந்தியாவில் குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் வேதாந்தாவின் தாமிர உருக்கு ஆலை அமைக்க முயன்று, தோற்றுப் போய் பின்னர் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 1989-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு விவசாயிகள் போராடியதால், அம்மாநில முதல்வர் சரத்பவார் ஆலை அமைக்க அனுமதி மறுத்து 1994-ல் கட்டுமானப் பணிக்குத் தடை விதித்தார்.

ஸ்டெர்லைட் தமிழகத்தை தேர்ந்தெடுத்த போதும் போராட்டங்கள் வெடித்தன, ‘மக்கள் முதல்வர்’ ஜெயலலிதாவின் அரசு, மக்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல், தூத்துக்குடியில் 30.10.1994-ல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்க அனுமதித்தது. கட்டுமானப் பணிக்கு அடிக்கல்லும் நாட்டினார் ‘மக்கள் முதல்வர்’.

18.3.1996 அன்று தூத்துக்குடி வந்த ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, கருப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது. அதன் பிறகு, தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.3.1996 அன்று ஆழ்கடலில் தடுத்து மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டது. கப்பல் கொச்சிக்கு சென்றது. 78 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகள் கொண்ட சுமார் 500 பேர் கொண்ட சிறிய மீனவர் படைதான் இதனை செய்தது.

பின்னர் 20.4.1996 முதல் இரு பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். அரசின் சார்பில் 18.4.1996 முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள் குழாய்கள் மூலம் கடலில் கலக்காது என்று உறுதியளிக்கப்பட்டது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் திட்டமிட்டே சாதி மோதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. மாவட்டத்தின் பிற பகுதிகளில் இந்த மோதல்கள் வீரியமாயின. இதன் பிண்ணனியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தன.

சாதியின் பெயரால் பிரிந்து கிடந்த மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, கொச்சியில் இருந்து லாரிகள் மூலம் தாமிரத் தாதுக்கள் கொண்டு வரப்பட்டன, 29.10.1996 அன்று எம்.வி.பரங்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேரிடையாகவே தாமிரத்தாதுவை சுமந்து வந்து சேர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுகத் தொழிற்சங்கத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் தலைமையிலான தொழிலாளர்கள் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க மறுத்துப் போராடினர். 152 விசைப்படகுகள், 36 நாட்டுப் படகுகளில் ஒன்று திரண்ட மீனவர்கள் அக்கப்பலை முற்றுகையிட்டு துறைமுகத்தை விட்டே வெளியேற்றினர். இதற்கிடையில் 1996 இறுதியில் தமிழக முதல்வரான கருணாநிதி அனுமதி கொடுத்ததால், 1997 முதல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்தது.

ஸ்டெர்லைட்டின் விதிமீறல்கள்:-

தூத்துக்குடி மக்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை இரு கட்டுப்பாடுகளோடு கொடுத்தது. "மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும். தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும்" என்பதுதான் அந்த கட்டுப்பாடுகள், ஆனால் ஆலை 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, பசுமை வளையம் குறிப்பிட்ட அளவில் அமைக்கவில்லை. மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் 1,70,000 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டது.

ஆய்வுகளை தூக்கி சாப்பிட்ட ஸ்டெர்லைட்:-

நாக்பூர் நீரி நிறுவனம், 1998-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வறிக்கை கொடுத்தது. அதே நீரி நிறுவனம், 2003-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வு அறிக்கை தந்தது குறிப்பிடத்தக்கது, இதற்கு காரணம் 1998 நவம்பர் அறிக்கைக்கு பின்னர் 1.22 கோடி ரூபாய் நீரி அமைப்பில் உள்ள அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணமாக ஸ்டெர்லைட் வழங்கியிருந்தது.

ஆனால்அமெரிக்காவில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளார் டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகளை சோதனை செய்து, அவர் தந்த ஆய்வறிக்கையில், “மண்ணும், நீரும் நச்சுத் தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டு இருப்பதாகவும், கால்நடைகள் செத்துப்போகும், மனிதர்கள் புற்று நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும்” என்று பல்வேறு புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.

உயிர்வாங்கி ஸ்டெர்லைட்:-

5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அதுபோல் 2.3.1999 அன்று அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 11 பேர் ஸ்டெர்லைட் நச்சு வாயுக் கசிவால் மயங்கி விழுந்தனர்.

23.3.3013 அன்று அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்தது, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். கதிர்வீச்சு கலந்து இருந்த இந்த நச்சுக் காற்றால், பனித்துளிகள் படர்ந்து இருந்த செடிகள், மரங்களின் இலைகளும், பூக்களும் நிறம் மாறி, கருகி உதிர்ந்தன. அதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே மயக்கமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

ஸ்டெர்லைட் ஆலை விபத்திற்கான பொறுப்பேற்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் பல முறை லட்சக்கணக்கில் அபராதம் கட்டியுள்ளனர். ஓர் ஆய்வில், “1994 முதல் 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர், 13 பேர் இறந்துள்ளனர். வெளியில் தெரியாமல் பல மரணங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.” என்பது தெரியவந்துள்ளது.

ஆபத்தான ஆலை கழிவுகள்:-

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்வை உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்றன. இவை நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது, ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.

அரசு இவர்கள் கையில்:-

தூத்துக்குடியில் 'ஸ்டெர்லைட்', சத்திஸ்கரில் 'பால்கோ', ஒரிசாவில் 'வேதாந்தா அலுமினியம்', கோவாவில் 'சேசா கோவா' என்று இந்தியாவையே வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம், கடந்த 25 ஆண்டுகளில், ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், எதிர்கட்சியான காங்கிரஸுக்கும், வேதாந்தா குழுமம் தொடர்ந்து நன்கொடைகளை வழங்கி வருவதாகச் சொல்லப்படுகின்றது. இந்துத்துவா குழுக்களால் நடத்தப்படும், லண்டனில் இருக்கும் ‘கிருஷ்ணா அவந்தி தொடக்கப் பள்ளி’க்கும் வேதாந்தா நிதி அளிக்கிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநராக கடந்த 2004 ஆம் ஆண்டு வரை ப.சிதம்பரம் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பானி, அதானி போன்று அனில் அகர்வாலும் இந்திய ஆட்சியாளர்களை கைக்குள் வைத்திருப்பதால் பெரிய அளவில் அரசியல் நெருக்கடி ஏதுமின்றி தொடர்ந்து தப்பித்து வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. நாடாளுமன்ற தேர்தல் நடந்த 2009-10-ம் ஆண்டில் வேதாந்தாவிடமிருந்து $3.66 மில்லியன் டாலர் அளவிற்கு நன்கொடை இந்திய அரசியல் கட்சிகள் பெற்றிருப்பதாக சொல்லப்படுகின்றது.

எல்லாம் பழசு:-

அமெரிக்காவில், 1890 ஆம் ஆண்டு, வாஷிங்டனுக்கு அருகில் அமைக்கப்பட்ட அசார்கோ (Asarco) எனும் தாமிர ஆலை மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது. இந்த ஆலைகள் மூலம் கொள்ளை லாபம் கிடைக்கிறது என்பதால், அமெரிக்காவிலும், சிலியிலும் பயனற்றது என்று தூக்கி எறியப்பட்ட பழைய இயந்திரங்களையும், ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம் வாங்கக்கூடிய 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய தொழில்நுட்பத்தையும் கொண்டு, தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது தான் இந்த ஸ்டெர்லைட் என்கிற நச்சு நிறுவனம்

தண்ணீர் திருட்டு:-

தாமிரபரணியில் இருந்து முறைகேடாக, திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றது.

நோய் பாதிப்பு:-

தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது. தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியுள்ளது. மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை.

சிந்திக்க:-

ஆலைக்கு அரசே அனுமதி கொடுத்துவிட்டு, பின்னர் அரசே தூத்துக்குடியை மனிதன் வாழ தகுதி இல்லாத பகுதியாக அறிவிக்கிறது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து.

துறைமுகம் போன்ற பல வசதிகளை பயன்படுத்தி தூத்துக்குடியை ஆக்கிரமித்துவிட்டது ஸ்டெர்லைட், மனிதன் வாழ வேண்டும் அல்லது ஆலை இருக்க வேண்டும் என்கிற இக்கட்டான சூழ்நிலையில், அரசு ஆலையின் பக்கம் நின்று டாட்டா காட்டுகிறது. இதனால் 25 ஆண்டுகளாக தூத்துக்குடி மக்கள் தங்களது உயிர் காக்க, தலைமுறைகள் தழைக்க, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு எதிரான அழுத்தங்களை போராட்டத்தின் மூலம் கொடுத்து, ஸ்டெர்லைட்டை லண்டனுக்கே அனுப்ப வேண்டியது நம் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கடமையாய் இருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
/body>