திருச்சி மதுரை கோட்டத்தில் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம், ப.சிதம்பரத்தை கைது செய்தது குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து பற்றி கேட்கப்பட்டது. அதற்கு திருநாவுக்கரசர், சி.வி.சண்முகம் மத்திய பிஜேபி அரசை மகிழ்ச்சியடைய வைக்க வேண்டுமென்று அப்படி பேசுகிறார். பொதுவாக, தமிழக அமைச்சர்கள், மத்திய பிஜேபி அரசு என்ன செய்தாலும் அதை அப்படியே வழிமொழிகிறார்கள்.
இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மன்மோகன்சிங்குடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர் ப.சிதம்பரம். அவரை கைது செய்ததால் குற்றவாளி ஆகி விட மாட்டார். குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், பொருளாதார சீர்குலைவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதைப் பற்றி கவலைப்படாமல் மத்திய அரசு எப்படி மக்களிடம் பணம் பறிக்கலாம் என்றுதான் செயல்படுகிறது.
நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
தமிழக பாஜக தலைவராக ரஜினிகாந்த் வரப் போவதாக செய்தி வந்துள்ளதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, பாஜகவில் அவர் உறுப்பினரே இல்லை. அவர் எப்படி தலைவராக முடியும். தலைவராக தகுதியான உறுப்பினர்கள் யாருமே பாஜகவில் இல்லையா? பாஜகவில் மாநில தலைவர் பதவி அல்ல, தேசிய தலைவர் பதவி கொடுத்தால் கூட ரஜினி அதை ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகம்தான் என்று பதிலளித்தார்.