கர்நாடகாவில் மீண்டும் கன மழை கொட்டி வருவதால், தமிழகத்திற்கு காவிரியில் வெள்ளம் போல் தண்ணீர் சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை இன்று காலை நிரம்பியது. மேட்டூர் அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்படுவதால், 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதல் வாரத்தில் கர்நாடகாவில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நான்கே நாட்களில் நிரம்பி வழிந்தன. அணைகளில் இருந்து உபரி நீராக, 3 லட்சம் கனஅடி வரை காவிரியில் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி 43 அடியாக இருந்த மேட்டூர் நீர்மட்டம், ஐந்தே நாட்களில் 100 அடியைக் கடந்தது. ஆகஸ்ட் 13-ந் தேதி 108 அடியை எட்டிய நிலையில், டெல்டா பாசனத்துக்காக அணையும் திறக்கப்பட்டது. படிப்படியாக 117 அடி வரை அணை நீர்மட்டம் உயர்ந்தது.
அதன் பின்னர் கடந்த 15 நாட்களாக நீர் வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டமும் லேசாக சரியத் தொடங்கியது. இந்நிலையில் கர்நாடகாவிலும், கேரளாவிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக, கன மழை மீண்டும் வெளுத்துக் கட்டுகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் மீண்டும் நிரம்பி வழிய காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் நேற்று காலை முதல் படிப்படியாக, அணை நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர்வரத்து உள்ளதால் நேற்று காலை 116.72 அடியாக இருந்த நீர் மட்டம் , இன்று காலை முழு 9 மணியளவில் முழு கொள்ளவை (120 அடி)எட்டியது. மேட்டூர் அணையின் சரித்திரத்தில் அணை நிரம்புவது இது 40-வது முறையாகும்.
இதனால் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 32,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய உபரி நீர் 50 ஆயிரம் கன அடி வரை காவிரியில் திறக்கப்படுவதால், 12 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேட்டூருக்கு வரும் நீரின் அளவும் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து அதிகரிக்கும். இதனால் இந்த ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் பெருமளவில் கடலில் சென்று வீணாக கலக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.