ஆழ்துளைக் கிணற்றுக்குள் இனியொரு உயிர் பலியாகி விடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி ஆகியோரின் 2 வயது குழந்தை சுஜித்வில்சன் கடந்த 25ம் தேதி மாலையில் வீட்டுக்கு வெளியே உள்ள நிலத்தில் உள்ள விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். சுமார் 80 மணி நேரமாக தொடர்ந்து பல்வேறு மீட்பு படையினர் போராடி குழந்தையை உயிருடன் மீட்க முயன்றனர். ஆனால், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் இன்று(அக்.29) அதிகாலை மீட்கப்பட்டது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள் வருமாறு:
நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்க விட்ட சுஜித், நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய் விட்டான்.
சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது?அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்.
ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.