ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் இன்று(அக்.29) அதிகாலை மீட்கப்பட்டது. உடலுக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் கடந்த 4 தினங்களாக நடைபெற்று வந்தது. 80 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் சுஜித் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. குழந்தையை பத்திரமாக மீட்க முடியவில்லையே என்ற கவலையில் அங்குள்ளவர்கள் கதறி அழுதனர். பின்னர், அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதையடுத்து, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்டோர் குழந்தையின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் உடல் பாத்திமாநகர் கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு கிறிஸ்தவ முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.