அல்கொய்தாவுடன் தொடர்பு.. திருச்சியில் 2 பேர் கைது.. என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை

by எஸ். எம். கணபதி, Nov 30, 2019, 13:25 PM IST
Share Tweet Whatsapp

திருச்சியில், அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் சமூக வலைதளங்களில் தொடர்பு வைத்திருந்த 2 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர்களின் வீட்டில் இன்று அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கே.ஆர்.எஸ். நகரில் வசித்து வரும் சர்புதீன் என்பவர் அவ்வப்போது அரபு நாடுகளுக்கு சென்று பணியாற்றி வந்தார். இவர் தீவிரவாத அமைப்பான அல்-கொய்தா அமைப்பின் முகநூல் கணக்கில் இணைந்து அல்கொய்தா அமைப்பினர் வெளியிடும் கருத்துக்களுக்கு பதில் அளிப்பதும், ஆவணங்களை டவுன்லோட் செய்வது மற்றும் லைக் செய்து வந்ததாக தெரிகிறது.

தீவிரவாத அமைப்புகளின் சமூக வலைதளங்கள், முகநூல், வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றங்களை கண்காணிப்பதற்காக தேசிய புலனாய்வு அமைப்பில்(என்.ஐ.ஏ) ஒரு தனிப்பிரிவு(எஸ்.ஐ.யு) இயங்கி வருகிறது. இந்த பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கடந்த ஒரு மாதமாக திருச்சி சர்புதீன் முகநூல் கணக்கை கண்காணித்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கோவையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் கேரள டிஎஸ்பி ஜார்ஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் திருச்சி மாநகர போலீசார் துணையுடன் இன்று அதிகாலை 5 மணிக்கு சர்புதீன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள், சர்புதீன் வீட்டில் சில மணி நேரம் தொடர் சோதனையில் ஈடுபட்டதுடன், குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில், சர்புதீனும் அவரது மைத்துனர் ஜாபரும் அல்கொய்தா முகநூலை பின்பற்றி வந்ததும், வாட்ஸ் அப் மூலம் சில தகவல் பரிமாற்றங்கள் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வீட்டிலிருந்து செல்போன், பென் ட்ரைவ் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் என்ஐஏ அமைப்பினர் கைப்பற்றியதுடன், தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இருவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். என்ஐஏ அமைப்பினரின் இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

இதே போல், தஞ்சையிலும் ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் சேக் அலாவுதீன். இவர் வீட்டின் முன்பாக செருப்பு கடை வைத்துள்ளார். இவரது வீட்டில் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் என்ஐஏ அதிகாரிகள் 5 பேர் இன்று காலை சோதனை நடத்தினர். இவர் ஏற்கனவே சிமி தீவிரவாத அமைப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் மீண்டும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கிறாரா என்ற விசாரணை நடத்தப்பட்டது.

 
READ MORE ABOUT :

Leave a reply