மீட்கப்பட்ட சுஜித் உடலை வெளியே காட்டாதது ஏன்? வருவாய் நிர்வாக ஆணையர் பதில்..

by எஸ். எம். கணபதி, Oct 30, 2019, 17:05 PM IST

மீட்கப்பட்ட சுஜித் உடலை வெளியே காட்டாதது ஏன்? என்பதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் பேரிடர் மீட்பு துறை ஆணையர் ராதாகிருஷ்ணன், இன்று(அக்.30) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் 600க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு பணியாற்றியவர்களின் திறனை சந்தேகிப்பது சரியான செயல் இல்லை.
ஒரு கட்டத்தில், ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால்தான், மீட்புப் பணிகளை நிறுத்தி விட்டு சுஜித் உடல் மீட்கப்பட்டது. அதுவும் பேரிடர் மீட்புக் குழுவின் வழிமுறைகளின்படி சுஜித் உடல் மீட்கப்பட்டது. இது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்படுகிறது. இது களத்தில் முழுமூச்சுடன் பணியாற்றியவர்களை கவலையடையச் செய்துள்ளது.

சுஜித்தை தன்னால் மீட்க முடியும் என்று உ.பி. மாநிலம் லக்னோவில் இருந்து ஒருவர் கூறினார். அவருக்கு கூட விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கப்பட்டது. மனிதர்களால் செய்யக் கூடிய அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

அதேபோல், சுஜித்தின் சடலத்தை வெளியில் காட்டாதது ஏன் என்று கேட்கிறார்கள். உயிருடன் இருக்கும் போது நடைபெறும் மீட்புப் பணி என்பது வேறு, சடலமாக மீட்கும் போது நடக்கும் மீட்புப் பணி வேறு. இது போன்று மரணம் அடைந்தவர்களின் உடல்களை காட்சிப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு எதிரானது.

கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை காட்சிப்படுத்தியதால், உலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதன் பிறகு இதற்கான விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டது. அதன்படிதான், சுஜித்தின் உடல் ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தவில்லை.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.comMore Tiruchirappalli News

அதிகம் படித்தவை