ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தைக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி.. வைரமுத்து, விமல், விவேக் கண்ணீர்...

by Chandru, Oct 29, 2019, 19:13 PM IST

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 4 நாட்கள் போராடியும் உயிடன் மீட்க முடியவில்லை. சுஜித் உடல் மீட்கப்பட்டு அப்பகுதியிலே அடக்கம் செய்யப்பட்டது. சுஜித் மறைவையொட்டி திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். கவிஞர் வைரமுத்து சுஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில் கூறியிருப்பதாவது:

அதோ ஒருத்தியின் கண்ணில் உலகத்தின் கண்ணீர், வந்த மழையும் இனி எந்த மழையும் அந்தத் தாயின் கண்ணீர் கறையைக் கழுவ இயலுமா.. அடே சுஜித் இத்தனை பேர் அழுத கண்ணீரில் நீ மிதந்து மிதந்து மேலெழும்பி இருக்கலாம் ஆனால் அழுத கண்ணீரெல்லாம் உன்னை அழுகவைத்து விட்டதே உன்னை மீட்க கையில் கயிறு கட்டிப்பார்த்தோம், ஆனால் உன் கால் விரலில் கயிறு கட்டிவிட்டதே மரணம்... எவன் அவன் பின்கூட்டிப் பிறந்த குழந்தைக்கு முன்கூட்டியே சவக்குழி வெட்டியவன் உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ நடக்கக்கூடாதது நடந்தேறிவிட்டது..

மரணத்தில் பாடம் படிப்பது மடமைச் சமூகம் மரணத்திலும் கல்லாதது அடிமைச் சமூகம். ஏய்... மடமைச் சமூகமே, வாழ்வின் பக்கவிளைவு மரணமெனில் மரணத்தின் பக்கவிளைவு ஞானம் தானே அந்தச் சவக்குழிக்குள் மண் விழுவதற்குள் அத்தனை அபாய குழிகளையும் மூடி விடு.. அந்த மெழுகுவத்தி அணைவதற்குள் அத்துனை கண்ணீரையும் துடைத்து விடு. ஏய்... வானம் பார்க்கும் தொழில்நுட்பமே சற்றே குனிந்து பாதாளம் பார் இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள்

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

இதுபற்றி நடிகர் விமல் கூறும்போது,'சுஜீத் உயிருடன் வந்துவிடுவான் என்றுதான் எல்லோருமே காத்துக்கொண்டிருந்தோம். அவனை உயிருடன் மீட்பதற்காக கடுமையான போராடினர்கள். ஆழ்துளை கிணற்றுப் பகுதி பாறைகள் நிறைந்த ஏரியா என்பதால் மீட்ப பணியில் சிரமம் ஏற்பட்டது. மழை பெய்துகொண்டிருந்ததால் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் பணியை நிறுத்தவில்லை. எனது சொந்த ஊர் மணப்பாறை. எங்கள் ஊருக்கு அருகில்தான் சிறுவன் ஊர். தகவல் அறிந்து பதற்றத்துடன் சம்பவ இடத்திற்கு சென்று காத்திருந்தேன். இந்த முறை யாரும் எங்கள் பகுதியில் யாரும் தீபாவளி கொண்டாடவில்லை. இது சோகமான தீபாவளி ஆகிவிட்டது' என தெரிவித்தார்.


நடிகர் விவேக் கூறும்போது,'கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு! சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது?' என கூறியுள்ளார்.

அதேபோல் நடிகர்கள் விஷ்ணு விஷால், கருணாகரன், மனோபாலா, இசை அமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் அருண் பாரதி, நடிகைகள் ஜனனி ஐய்யர், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் சுஜீத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.comMore Tiruchirappalli News

அதிகம் படித்தவை