பெரியார் இப்போது இருந்தால் செருப்பு மாலை போட்டிருப்பேன்.. பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சை

by எஸ். எம். கணபதி, Nov 19, 2019, 11:27 AM IST
Share Tweet Whatsapp

பெரியார் இப்போது உயிருடன் இருந்தால், அவருக்கு செருப்பு மாலை போடுவேன் என்று பாபா ராம்தேவ் மீண்டும் பேசியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே இருப்பதால், பாஜக மறைமுகமாக தனது வேலையை துவங்கி விட்டது. திருவள்ளுவர் இந்து துறவி என்று கூறி, பாஜகவினர் அவருக்கு காவி உடை போட்டு படங்களை வெளியிட்டனர். அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு படி மேலே போய், திருக்குறளே சனாதன தர்மத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்று தெரிவித்தார். இதையடுத்து, திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள்(அதிமுக நீங்கலாக), இடதுசாரிகள் மற்றும் தமிழ்தேசிய சிந்தனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்பின்னர், இந்த சர்ச்சையை எதிர்பாளர்கள் கைவிட்டாலும் பாஜகவினர் விட மறுக்கிறார்கள். அது மட்டுமல்ல. இந்து மதரீதியான உணர்வுகளை தூண்டுவது மட்டுமே தங்கள் குறிக்கோள் என்ற ரீதியில் தங்கள் தேர்தல் பிரச்சாரப் பணிகளை துவக்கி விட்டனர்.

இந்நிலையில், பாஜகவின் ஆதரவு ரிபப்ளிக் டி.வி.யில் யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அதில் அவர், பெரியார், அம்பேத்கார் ஆகியோரின் தொண்டர்களை பற்றி நான் கவலைப்படுகிறேன். அவர்களின் செயல்கள் தீவிரவாதச் செயல்களாக இருப்பதால் அதைக் கண்டு அஞ்சுகிறேன். பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ராம்தேவ் பெயரை குறிப்பிடாமல், பெரியாரை பற்றியும், பெரியாரின் சித்தாந்தங்களை பற்றியும் வலதுசாரிகள் திட்டமிட்டு குறிவைத்து தாக்குவதை கடுமையாக கண்டிக்கிறேன். பெரியார் ஏழைகளுக்காக பாடுபட்டவர். பெண்களின் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்தவர். சாதி ஒழிப்புக்காக போராடியவர். திராவிடக் கொள்கைகளை ஒடுக்க நினைக்கும் சக்திகளை எதிர்த்து கொள்கைகளை காப்போம் என்று கூறியிருந்தார். இதே போல், திராவிட இயக்க சிந்தனையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், கடந்த 2, 3 நாட்களாக பெரியார் தொண்டர்கள் என் பின்னால் வருகிறார்கள். பெரியார் உயிருடன் இருக்கும் போது சாமி சிலைகளுக்கு செருப்பு மாைல போட்டாராம். ராமர், கிருஷ்ணருக்கு செருப்பு மாலை போட்டாராம். நல்லவேளை அவர் இப்போது உயிருடன் இல்லை.

நான் இருக்கும் போது அவர் இருந்தால், அவருக்கு அதை விட அதிகமான செருப்பு மாலைகள் போட்டிருப்பேன். அவரால் தப்பித்திருக்கவே முடியாது. என்ன செய்வது? அவர் காலத்தில் நான் இல்லை என்று நக்கலாக பேசியிருக்கிறார். இதே போல், அம்பேத்காரையும் ராம்தேவ் விமர்சித்திருக்கிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி, திமுக பிரமுகர் ஒருவர் கூறுகையில், பாஜகதான் எப்படியாவது இந்து மத உணர்வைத் தூண்டி விட்டு, தமிழகத்தில் கால் பதித்து விட வேண்டும் என்று மறைமுகமாக பல்ேவறு வழிகளில் திராடவிக் கொள்கைகளை ஒழிக்க பார்க்கிறது. இந்து மக்களிடம் இறையுணர்வை தூண்டி விட்டு, அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறது. அதற்கு இடம் அளித்து விடக் கூடாது என்பதால், பொறுமையாக அதை எதிர்கொண்டு வருகிறோம் என்றார்.


Leave a reply