ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருவதால், அடுத்த மாதம் முதல் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளன.
அம்பானியின் ஜியோ மொபைல் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஏர்டெல், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி கடன் வைத்துள்ளது. இதில் மத்திய அரசுக்கு ரூ.21,632 கோடியை உடனே செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே போல், வோடபோன்-ஐடியா நிறுவனம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன் வைத்துள்ளது. இதுவும் அரசுக்கு உடனடியாக ரூ.28 ஆயிரம் கோடி செலுத்த வேண்டியுள்ளது. மேலும், இந்த நிறுவனம் கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.51 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளது.
இந்நிலையில், ஏர்டெல், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டணங்களை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு சேவைகளில் குறைந்தது 5 முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது நாட்டில் லாபத்துடன் இயங்கும் ஒரே மொபைல் சேவை நிறுவனமான ஜியோ, 35 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனம், கட்டணத்தை உயர்த்துவது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.