வரும் 2021ம் ஆண்டு தேர்தலில் அதிசயம் நடக்கும் என்று ரஜினி சொன்னதற்கு எடப்பாடி பழனிசாமி கிண்டலாக விளக்கம் அளித்துள்ளார்.
கோவாவில் இருந்து இன்று(நவ.21) சென்னை திரும்பிய ரஜினி, வழக்கம் போல் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், வரும் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் நான் கூறிய அதிசயத்தை, அற்புதத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள். மிகப்பெரிய அதிசயத்தை மக்கள் நடத்தி காட்டுவார்கள் என கூறினார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ரஜினியின் பேச்சு பற்றி கேட்டதற்கு அவர் சிரித்து கொண்டே, எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார் என்று தெரியவில்லை. 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சி தொடரும் என்பதையே அதிசயம் நிகழும் என ரஜினிகாந்த் கூறியிருப்பார். 2021ம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார். ரஜினி கட்சி ஆரம்பித்த பிறகே அவரது கருத்துகளுக்கு பதில் சொல்கிறேன் என்றார்.
உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுகத் தேர்தல் கொண்டு வருவதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பற்றி கேட்டதற்கு அவர், 2006ம் ஆண்டில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின், மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். பல மாநிலங்களில் இப்படித்தான் நடக்கிறது என்று அவர் அப்போது சொன்னார். ஸ்டாலின் சொன்னால் சரி, நாங்க கொண்டு வரக் கூடாதா? என்று பதிலளித்தார். கூட்டணி பற்றி கேட்டதற்கு, நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணி தொடரும் என்றார்.