உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இவை வரும் 11ம் தேதி விசாரணைக்கு வருகின்றன.
தமிழகத்தில் சமீபத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. புதிய மாவட்டங்களுக்கு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் திமுக ஒரு மனு தாக்கல் செய்தது. இதற்கு பின், பழைய மாவட்டங்களின் அடிப்படையில்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார்.
இதன்பின், இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மனுக்கள் அனைத்தும் கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. அவற்றை விசாரித்த நீதிபதிகள், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளித்தனர். இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 4 மாதங்களில் மறுவரையறை செய்து உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை அடுத்து, 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் ஏற்கனவே அறிவித்த டிச.27, 30 தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனு தாக்கல் டிச.9ம் தேதி தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார். அதன்படி இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் முறையாக இடஒதுக்கீடு செய்யாமல் மீண்டும் அவசரமாக உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளது என்று திமுக, காங்கிரஸ் தரப்பில் மீண்டும் ஒரு புதிய மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்ய்பப்பட்டது. மேலும், 9 மாவட்டங்களில் மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால், அது இடஒதுக்கீடு சரியாக பின்பற்ற முடியாமல் செய்து விடும் என்றும் மனுவில் கூறப்பட்டது. இம்மனுவை வரும் 11ம் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.