அதிமுகவில் கட்சிக்காரர்கள் தனிப்பட்ட கருத்துக்களை சொல்வதற்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் பாஜக அழுத்தம் இருக்கலாம் என்ற சந்தேகம் அரசியல்வட்டாரங்களில் எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தேனியில் மட்டுமே வெல்ல முடிந்தது. அப்போது, இந்த மாபெரும் தோல்விக்கு பாஜக கூட்டணியே காரணம் என்று ஒரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். பின்னர், அதை மழுப்பலாக விளக்கம் கொடுத்து மறுத்தார்.
தற்போது உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியிருக்கிறது. ஆளும் கட்சியாக இருந்தும், அதிகார, பண பலங்கள் இருந்தும், பெரிய கூட்டணி அமைத்தும் அதிமுகவால் அதிக இடங்களை பிடிக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்களும், திராவிட இயக்கங்களும் பெரும் போராட்டம் நடத்தியால் மக்களிடம் ஏற்பட்ட மாற்றம் என்று பேசப்படுகிறது.
அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜாவின் மகன், மகள் இந்த ேதர்தலில் தோற்றார்கள். அவர்கள் தோற்பார்கள் என்பது முன்பே தெரியும் என்றும், பாஜக கூட்டணியே இதற்கு காரணம் என்றும் அன்வர்ராஜா பகிரங்கமாக கூறினார்.
மேலும், நியூஸ் 7 டி.வி. சேனல் பத்திரிகையாளர் விஜயனுக்கு அன்வர்ராஜா ஒரு விரிவான பேட்டி அளித்திருந்தார். அதில், பாஜக கூட்டணி குறித்து பத்திரிகையாளர் விஜயன் மடக்கி, மடக்கி பல கேள்விகளை கேட்டார். இதற்கு அன்வர்ராஜா பதிலளித்த போது வெளிப்படையாக பல விஷயங்களை கூறினார். அவர் கூறியதாவது:
முத்தலாக் தடை சட்ட மசோதா முதன்முதலில் 2015ல் பாஜக அரசு கொண்டு வந்த போது ஜெயலலிதா என்னிடம் கருத்து கேட்டார். நான் ஷரியத் சட்டத்தில் ஒரே கட்ட தீர்வு இருப்பதை காரணங்களுடன் விளக்கினேன். உடனே, அந்த சட்டத்தை எதற்காக எதிர்க்கிறோம் என்பதை விளக்கி, ராஜ்யசபாவில் பேசுமாறு ஜெயலலிதா எனக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், அப்போது அந்த சட்டம் வரவில்லை.
இதனால்தான், இப்போது அந்த சட்டம் வந்த போது நானே பேச அனுமதிக்கப்பட்டேன். ஜெயலலிதா எடுத்த முடிவில் மாற விரும்பாமல், என்னை அப்படியே பேசுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். அதனால், நான் பேசியது கட்சியின் கருத்துதான். தனிப்பட்ட கருத்து என்று சொல்வது தவறு. அதிலும் அதிமுகவுக்கு 14 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த நேரம் முழுவதும் நானே பேசினேன். வழக்கமாக 2, 3 பேர் பேசுவோம்.
குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி எல்லாம் நிறைவேற்றுவோம் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா சொல்வது அவரது கருத்து. அவர் சொன்னதெல்லாம் இப்போது நடக்கலாம். எனது அரசியல் வாழ்வில் இதைப் ேபால பல நிகழ்வுகளை பார்த்திருக்கிறேன். சிலர் சொன்னது சில காலம் நடக்கலாம். அதற்கு பிறகு அவர் சொல்லாமலேயே காணாமல் போய் விடுவார்கள்.
அதிமுகவும், திமுகவும் எந்த காலத்திலும் மத அரசியல் பண்ண மாட்டார்கள் என்பது என் கருத்து.
இவ்வாறு அன்வர்ராஜா கூறியிரந்தார். மேலும், பாஜக கூட்டணி பற்றி பல விஷயங்களை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதிமுகவில் இப்படி ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கருத்து சொன்னால் எப்படி கூட்டணி தொடரும் என்று கேட்டு, பாஜக தரப்பில் இருந்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்துதான், அதிமுகவில் தனிப்பட்ட முறையில் யாரும் கருத்து கூறக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்ட அறிக்கை வருமாறு:அ.தி.மு.க.வின் தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து அ.தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துகளையும், அரசியல் பார்வைகளையும் பொது வெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டாம்.மிகுந்த கட்டுப்பாடும், ஒழுங்கும், ஜனநாயக பண்பும் நிறைந்த அ.தி.மு.க. கட்சி, தற்போதைய கூட்டணி குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஆராய்ந்து கட்சியின் கொள்கை கோட்டுபாடுகளின்படி முடிவு எடுப்பார்கள்.
ஜெயலலிதா காட்டிய வழிகளில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளை பற்றிய தனிநபர்களின் விமர்சனங்களும், கருத்துகளும் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி கட்சிக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் அத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கட்சியினர்களை கண்டிப்புடன் நெறிப்படுத்த கடமைப்பட்டு இருக்கிறோம்.
மக்கள் நல பணிகளை திறம்பட ஆற்றி கட்சிக்கு பெருமை சேர்க்கும் வேலைகளில் மட்டுமே கட்சி தொண்டர்கள் இப்போது ஈடுபட வேண்டும். கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு இருப்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.