கால்பிடித்து, காலம்கடத்தி தலைசுத்திருச்சு காரியக்காரர்...ரஜினியை வசைபாடிய உதயநிதி

by எஸ். எம். கணபதி, Jan 16, 2020, 11:38 AM IST
Share Tweet Whatsapp

முரசொலியை மட்டம் தட்டும் வகையில் ரஜினி பேசியதை அடுத்து அவரை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
துக்ளக் பத்திரிகையின் 50ம் ஆண்டு விழா, சென்னையில் கடந்த 14ம் தேதி நடைபெற்றது.

இதில், துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், முரசொலி வைத்திருந்தால் அவர்களை திமுககாரர் என்று சொல்லி விடலாம். துக்ளக் வைத்திருந்தால் அவர்களை அறிவாளி என்று சொல்லிவிடலாம். துக்ளக் பத்திகை வைத்திருந்ததால் அவர் அறிவாளியானாரா? அல்லது துக்ளக் படித்ததால் அறிவாளியானாரா? என்று தெரியாது என்று குறிப்பிட்டார்.
ரஜினியின் இந்த பேச்சு, திமுகவினர் மத்தியில் கடும் ஆத்திரத்தை கிளறி விட்டது. துக்ளக் படிப்பவன் மட்டும்தான் அறிவாளியா? முரசொலி படிப்பவன் எல்லாம் முட்டாளா? என்று கொதித்தெழுந்தனர். இதையடுத்து, சமூக ஊடகங்களில் அவரை கடுமையாக விமர்சித்தனர்.


இந்நிலையில், திமுகவில் முக்கிய தலைவர்கள் யாருமே ரஜினிக்கு எதிர்வினை ஆற்றவில்லை. இளைஞரணி செயலாளரும், முரசொலி நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவுகள் வருமாறு:
முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா... கால்நூற்றாண்டாக கால்பிடித்து, காலம்கடத்தி தலைசுத்திருச்சு என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்.


முரசொலி, தமிழினத்தின் தன்மானத்தை உயர்த்திய முதுகெலும்பு. தேநீர்க் கடை, முடிதிருத்தும் நிலையங்களை படிப்பகங்களாக்கி, கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் பாடம் நடத்திய கழகத்தின் அறிவாயுதம். இது, என்றும் எளியோரின் குரலாய் ஒலித்துக்கொண்டே இருக்கும்.இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
READ MORE ABOUT :

Leave a reply