புதிய கட்சி தொடங்குவது குறித்து ரஜினி தனது மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் நாளை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இதில், புதிய கட்சியை ஏப்ரல் 14ம் தேதி தொடங்குவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வந்தாலும் வருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியாகக் கடந்த 2017 டிசம்பர் 31ம் தேதியன்று அவர், நான் அரசியலுக்கு வருவது உறுதி, தனிக் கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று பேட்டி கொடுத்தார். அதற்குப் பிறகு, ரஜினி மக்கள் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகளையும் மாவட்டச் செயலாளர்களை நியமித்தார்.
இதற்குப் பின்னர், கடந்த 5ம் தேதியன்று தனது மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை அழைத்து ரஜினி ஆலோசனை நடத்தினார். அப்போது, தனக்கு முதலமைச்சர் ஆக ஆசையில்லை என்றும் வேறொருவரை தான் கைகாட்டுவதாகவும், கட்சிக்கு மட்டும் தான் தலைமை ஏற்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், இப்படிச் செய்தால் மக்களிடம் ஓட்டு கிடைக்காது என்று மாவட்டச் செயலாளர்கள் கூறியுள்ளனர். அதே போல், கட்சி தொடங்கியவுடன் மாற்றுக் கட்சிகளில் இருந்து வரும் முக்கியப் பிரமுகர்களுக்குப் பதவி தரப்படும் என்றும் மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து அதே பொறுப்பில் இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதுவும் நீண்ட காலமாகப் பதவிக்காகக் காத்திருந்த மன்ற நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியளித்தது.
இதன்பின், ரஜினி பேட்டியளித்த போது, கூட்டத்தில் தனது நிர்வாகிகளின் கேள்விகளுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் தான் பதிலளித்ததாகவும், அதே சமயம் தனக்கு ஒரு ஏமாற்றம் என்றும் கூறினார். இது பெரிய விவாதத்தைக் கிளப்பி விட்டது.
இந்த சூழ்நிலையில், ரஜினி மீண்டும் நாளை(மார்ச்12) காலையில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். காலை 8 மணிக்கே அவர்களைத் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வருமாறு ரஜினி கூறியுள்ளார். எனவே, நாளை காலை ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் சுமார் 11 மணிக்கு ரஜினியிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வரலாம். அனேகமாக, ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அவர் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.