பிளஸ் 2 பொதுத் தேர்வைத் தாமதமாகத் தொடங்க ஐகோர்ட் உத்தரவு...

by எஸ். எம். கணபதி, Mar 23, 2020, 13:42 PM IST

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்க வேண்டுமென்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், நூற்றுக்கணக்காணோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை ஆய்வு செய்து வெளியிட்ட அறிவிப்பின்படி நாடு முழுவதும் 82 மாவட்டங்களை மற்ற மாவட்டங்களுடன் தொடர்பு இல்லாமல் முடக்கி வைக்க உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதனால், இந்த மாவட்டங்களுக்கு இருசக்கர வாகனங்கள், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் வெளி மாவட்டங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரு பொது நலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகத் தமிழகத்தில் பொது மக்கள் அதிகமாகக் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மட்டும் தள்ளி வைக்கப்படாமல் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இதனால் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த 3 மாவட்ட மாணவர்கள் தேர்வு எழுதக் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே, தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், மாணவர்கள் தேர்வு எழுதத் தயாராக உள்ள நிலையில், தேர்வைத் தள்ளி வைத்தால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், பிளஸ் 1 வகுப்பிற்கு இன்று உயிரியல், வணிக்கணிதம் தேர்வுகளும், பிளஸ் 2 வகுப்பிற்கு நாளை வேதியியல் தேர்வும் நடத்தப்படவுள்ளது. அத்துடன் தேர்வுகள் முடிந்து விடும் என்பதால் தள்ளி வைக்க வேண்டியதில்லை என்று வாதாடப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியருக்கு உரியப் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். மேலும் அவர்கள் வந்து சேர தாமதமானால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகக் காலை 10 மணிக்குப் பதிலாக 10,30 மணிக்குத் தேர்வைத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Leave a reply