வெளிமாநிலங்களைச் சேர்ந்த 1.34 லட்சம் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு சார்பில் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கொரானா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள பிற மாநிலத் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு சார்பில் உணவு, தங்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிறமாநிலத் தொழிலாளர்களுக்காக குருநானக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஏப்.3) காலை பார்வையிட்டார். அதன்பிறகு, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் அமைத்து உணவு, மருத்துவ வசதிகளை அரசு செய்து தருகிறது. முதல்வர்களுடன் பிரதமர் நடத்தியக் கூட்டத்தில் கொடுத்த ஆலோசனையின்படி, பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு அவர்கள் இருக்கும் மாநில அரசுகளே உதவிகளைச் செய்து தர வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.
தமிழகத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு லட்சத்து 18,336 பேர் உள்ளனர். அதே போல், கடைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பிறமாநில ஊழியர்கள் 3,409 பேர், உணவகங்களில் 7871 பேர், பண்ணைகளில் 4,953 பேர் என்று ஒரு லட்சத்து 34,659 பேர் உள்ளனர். இவர்கள் ஒடிசா, மேற்குவங்கம், அசாம், ஜார்கண்ட், உ.பி. மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சென்னையில் 3 இடங்களில் முகாம் அமைத்து உணவு, மருத்துவ வசதிகளை அளித்து வருகிறோம்.
ஊரடங்கின் போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அறிவித்த போதிலும் பலர் அதை மீறுகிறார்கள். அவர்கள் மீது வழக்குப் போடப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. அப்படியும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.