தமிழகத்தில் சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நேரத்தில், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, உள்பட பல மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, ஜூலை 30க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததாலும், எளிதில் பரவக் கூடியதாக உள்ளதாலும் உலக நாடுகள், முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தாலும், பல மாவட்டங்களில் ஊரடங்கு கடடுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதே சமயம், பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பால், காய்கறி, மளிகை, மருந்து கடைகள் மட்டும் திறக்கப்படுகிறது. ஜூன் 31க்கு பிறகு, கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டாலும் பஸ், ரயில் ஓடவில்லை.ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்பது குறித்து தமிழக அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.இது தொடர்பாக, கருத்து கேட்பதற்காக அனைத்து மாவட்டக் கலெக்டர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிறகு, மருத்துவ நிபுணர்களிடமும் கலந்தாலோசித்து, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிக்கவுள்ளார்.
அனேகமாக, மாவட்டங்களின் நிலைமைக்கு ஏற்ப அந்தந்த மாவட்டக் கலெக்டர்களே ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ளும் வகையில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஸ், ரயில் போக்குவரத்து மேலும் சில நாட்களுக்கு தடை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஊரடங்கு நீட்டிப்பா? 29ல் கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை..
Advertisement