கொரோனா பேரிடருக்கு மத்தியிலும், லெபனானில் நடந்த வெடிவிபத்து உலக நாடுகளில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மிகப்பெரிய விபத்தில் லெபனானின் பெய்ரூட் துறைமுகமும் மொத்தமாகச் சிதைந்துள்ளது. 135 பேரின் சாவும் இந்தக் கொடூர விபத்தால் நடந்தேறியிருக்கிறது. கடந்த ஆறு வருடமாக பெய்ரூட் துறைமுகத்தில் இருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட்டே, இவ்வளவு பெரிய கோர விபத்துக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இதனால் அதிகளவு அம்மோனியம் நைட்ரேட் வைத்துள்ள உலக நாடுகள் அச்சத்தில் மூழ்கியுள்ளன.
இதற்கிடையே நம், சென்னையும் இதே போன்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த ஆறு வருடங்களாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான் தற்போது சென்னைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி, ``சென்னை கிடங்கில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டால் அதே போன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்தைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
சென்னைக்கு `அம்மோனியம் நைட்ரேட்' வந்த பின்னணி!
சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு, கரூரில் உள்ள அம்மன் கெமிக்கல் நிறுவனம் சென்னை துறைமுகத்தில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்ய முற்பட்டது. துறைமுக அதிகாரிகள் பொருட்களைச் சோதனை செய்ததில், மிகவும் ஆபத்தான `அம்மோனியம் நைட்ரேட்' இருப்பது தெரியவரவே, சரக்கு இறக்குமதிக்கான அனுமதியைக் கேட்டுள்ளனர். அனுமதி இல்லாமல் இறக்குமதி செய்ய முற்படவே, சுங்கத்துறை அதிகாரிகள் அதனைக் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இது கடந்த ஆறு ஆண்டுகளாக 37 கன்டெய்னர்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. லெபனான் விபத்தை அறிந்தவுடன், சென்னையிலும் இது மாதிரி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அதிகாரிகள் மத்தியில் எழுந்தது. இதன்பின் இந்த விவகாரம் வெளியில் கசிய இப்போது சர்ச்சையாகியுள்ளது.
இதன்பின் பெட்ரோலியம், எக்ஸ்ப்ளோசிவ் சேஃப்டி (PESO) அதிகாரிகளுடன் சேர்ந்து கிடங்கில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். பெய்ரூட் துறைமுகத்திலும், இதேபோன்று சட்டவிரோத கடத்தல் `அம்மோனியம் நைட்ரேட்'தான் பிடித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மோனியம் நைட்ரேட் பயிர்களுக்கு உரமாகவும், அதே வேளையில் வெடி பொருள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அம்மோனியம் நைட்ரேட் எளிதாக வெடிக்கும் ரசாயனம் கிடையாது. ஆனால் ஒரே இடத்தில் நீண்ட காலமாக சேமித்திருந்தால், அம்மோனியம் நைட்ரேட் தானாகவே வெப்பத்தை வெளியிடும். இந்த வெப்பம் ஒருகட்டத்தில் நெருப்பாக மாறவும் வாய்ப்புண்டு.
அம்மோனியம் நைட்ரேட்டில் இருந்து ஆக்சிஜன் வெளியாகும் தன்மை இருப்பதால் வெப்பம் அல்லது தீ படும் பட்சத்தில் கடும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அம்மோனியம் நைட்ரேட்டால் உண்டாகும் தீ விபத்தால் ஏற்படும் சிவப்பு நிற புகை அதிக நச்சுத்தன்மையுடன் மனிதர்களை நொடியில் கொல்லும் சக்தி கொண்டது. இதனால் தான் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் சென்னை துறைமுகத்தில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஆனால் துறைமுக அதிகாரிகளோ வேதிப்பொருள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளனர்.