துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்து வாங்கி குவித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து ஆர்.எஸ்.பாரதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில், “தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியலுக்கும் வருமான வரித்துறையில் செலுத்தி உள்ள சொத்து விவரங்களிலும் உள்ள தகவல்களுக்கு முரண்பாடுகள் காணப்படுகின்றன.
ஓ.பன்னீர்செல்வம் மனைவி, மகன்கள், மற்றும் மகளின் பெயரிலும் அவரது சகோதரர் குடும்பத்தினர் பெயரிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. இவை அனைத்தையும் வருமான வரித்துறைக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை.
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு ஆகியோர் பல கம்பெனிகளில் இயக்குனர்களாக இருந்துள்ளனர். இவர்கள் பெயரில் ரூ.200 கோடிக்கு முதலீடு செய்துள்ளதாக அறிகிறேன்.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் சொத்துக்கள் வாங்கி உள்ளனர். சென்னையிலும் பல நிறுவனங்களில் இவரது குடும்ப உறுப்பினர்கள் பணம் முதலீடு செய்துள்ளனர். பங்குதாரர்களாகவும் உள்ளனர். இவை அனைத்தையும் முறையாக வருமான வரித்துறைக்கு அவர் கணக்கு காட்டவில்லை.
எனவே வருமான வரித்துறை சட்டம், அன்னிய செலாவனி சட்டம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், இந்திய தண்டனை சட்டம், பினாமி சட்டம், ஆகிய சட்டங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு இருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு பினாமி பெயரில் வாங்கிய சொத்துக்கள் விவரத்தையும் மனுவில் விரிவாக தெரிவித்துள்ளார்.